உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / பெண்கள் கல்லுாரி விழாவில் த.வெ.க., நிர்வாகி பங்கேற்பு; முதல்வருக்கு கட்டாய காத்திருப்பு

பெண்கள் கல்லுாரி விழாவில் த.வெ.க., நிர்வாகி பங்கேற்பு; முதல்வருக்கு கட்டாய காத்திருப்பு

தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழக வெற்றி கழக நிர்வாகி பங்கேற்றதைத் தொடர்ந்து, கல்லுாரி முதல்வரும் ஆங்கிலத் துறைத் தலைவரும் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப் பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு மகளிர் கல்லுாரி சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ஷீலா, ஆலங்குளத்தை சேர்ந்த வணிகர் அமைப்பின் நிர்வாகியை கல்லுாரி விழாவுக்கு அழைத்திருந்தார். கடந்த ஆக., 6ல் நடந்த நிகழ்ச்சியில், ஆலங்குளத்தில் மல்டி பிளக்ஸ் தியேட்டர், எண்ணெய் மில் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வரும், வணிகர் சங்கங்களின் நிர்வாகி டி.பி.வி.வைகுண்டராஜா, அவரது மகன் த.வெ.க., கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலர் டி.பி.வி.வி.விபின் சக்ர வர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் கல்லுாரிக்கு 25 கம்ப்யூட்டர்கள் வழங்கினர். அந்த கருவிகளை மாணவர்களுக்கு விபின் வழங்கியபோது, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக கோஷங்கள் எழும்பின. அந்த விழாவில் பேசிய விபின், ஓட்டுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதுகுறித்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், தி.மு.க.,வினர் கடுப்படைந்தனர். விழாவில் ஆலங்குளம் சட்டசபை உறுப்பினர் ஓ.பி.எஸ்., ஆதரவாளர் மனோஜ் பாண்டியனும் பங்கேற்றிருந்தார். இதையடுத்து தி.மு.க.வினரின் அழுத்தத்தால், கல்லுாரி முதல்வர் ஷீலா, ஆங்கிலத்துறை தலைவர் சண்முக சுந்தரராஜ் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ