உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ராஜராஜசோழனின் 1040வது சதய விழா பெரியகோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்

ராஜராஜசோழனின் 1040வது சதய விழா பெரியகோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோயிலில், ராஜராஜசோழனின் 1040ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. தஞ்சாவூர், பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு, ஐப்பசி மாத சதய நட்சத்திர தினமன்று, சதய விழா என்ற பெயரில், இரு நாட்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, அக்., 31 மற்றும் நவ., 1 தேதிகளில், சதய விழா நடைபெற உள்ளது. பெரிய கோயில் வளாகத்தில், நேற்று காலை, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் கவிதா ஆகியோர் முன்னிலையில், பந்தல்காலுக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நடப்பட்டது. இதில், பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, அக்.,31ல் பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், சொற்பொழிவு நடைபெறுகின்றன. நவ., 1 காலை தேவார நுாலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறும். பிறகு, மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோயில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைக்கு சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகின்றன. இரவு ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை