உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பால் கொள்முதல் விலை உயர்வு கோரி மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

பால் கொள்முதல் விலை உயர்வு கோரி மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர்:பாபநாசம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, ஆதனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன், கறவை மாடு வளர்ப்போர் மகளிர் குழு சார்பில் கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் விமல்நாதன், போராட்டத்தின் போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு, பால் வினியோகம் செய்யும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு, ஒரு லிட்டர் பாலுக்கு, 25 முதல், 35 ரூபாய் மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, 2025 - 2026ம் ஆண்டில் பசும் பாலுக்கு, 50 ரூபாயும், எருமைப் பாலுக்கு, 75 ரூபாயும் கொள்முதல் விலை வழங்க வேண்டும். அரசு மதுபானங்களுக்கு கொள்கை முடிவு எடுப்பது போல், பால் கொள்முதல் விலைக்கும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கறவை மாடுகள் வளர்ப்பு திட்டத்தில் கடன் பெற்ற கறவை மாடு வளர்ப்பு மகளிர் விவசாயிகள், பாலுக்கு குறைந்தபட்ச லாபகரமான விலை இல்லாததால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அதற்கு அரசு தீர்வு காண வேண்டும். ஆண்டுதோறும் பாலுக்கான கொள்முதல் விலையை, உற்பத்தி செலவுகள் அடிப்படையில், குறைந்தபட்ச சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், 'பசும் பால் ஒரு லிட்டருக்கு, 60 ரூபாயும், எருமை பால் ஒரு லிட்டருக்கு, 90 ரூபாயும் விலை தருவோம் எனக் கூறும் அரசியல் கட்சிக்கே ஓட்டளிப்போம்' என, போராட்ட குழுவினர் அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை