தஞ்சையில் ரவுடி கொலை: பட்டப்பகலில் பயங்கரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே டூ வீலரில் சென்ற ரவுடி, காரில் மோதி தள்ளி, வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம், ஏழுப்பட்டியை சேர்ந்தவர் குறுந்தையன், 50. கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி. இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான தோப்புக்கு, டூ வீலரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார், அவரது டூ வீலரில் மோதியது.நிலை தடுமாறி விழுந்தவரை, காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். குறுந்தையன் அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, மர்ம நபர்களை விரட்டினர். அதில் ஒருவரை மட்டும் பிடித்தனர். மற்றவர்கள் காரில் தப்பினர். தமிழ் பல்கலை போலீசார், குறுந்தையன் உடலை கைப்பற்றினர். சிக்கிய நபரிடம் விசாரித்த போது, புதுச்சேரி அருகே ஆரோவில்லை சேர்ந்த வடிவேல், 38, என, தெரியவந்தது.கொலையான குறுந்தையன், 2013ல் உலகநாதன், 2014ல் உதயா ஆகியோரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இந்த கொலைகளுக்கு பழி தீர்க்கும் வகையில், தற்போது கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.