மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று
27-Dec-2025
தஞ்சாவூர்: வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு, 200 ஆண்டுகளாக, உள்ளூர் கிராம மக்கள் இணைந்து நடித்த நாடகம் நேற்று முன்தினம் நடந்தது. தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில், பொதுமக்கள் கண் விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோவில்களுக்கு சென்று, சொர்க்க வாசல் திறப்பில் சுவாமி தரிசனம் காண வேண்டும் என்பதற்காக, இரவு பொழுதுபோக்குக்காக சரித்திர நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஏகாதசி நாளில் துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, ஆன்மிக நாடகங்களான வள்ளி திருமணம், ராமாயணம், சத்தியவான் சாவித்ரி நாடகங்களை கிராம மக்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நாடகங்களுக்கு தேவையான கதா பாத்திரங்களாக கிராம மக்களே நடிக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர். மொபைல், சினிமா ஆதிக்கம் நிறைந்த இக்காலத்திலும், ஆன்மிக நாடகங்களை இந்த கிராமத்தினர் தொடர்ந்து, நடத்தி வருகின்றனர். கொல்லாங்கரை கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் கூறியதாவது: எங்கள் ஊரில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் நடத்தி வருகிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் நாடக பயிற்சியை துவங்கி விடுவோம். நாடகம் நடத்த, ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்து, நாடகத்தில் நடிக்க உள்ள கலைஞர்கள் விரதம் இருப்போம். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்துள்ளோம். சித்திரை மாதம் ஸ்ரீரங்கத்துக்கு சென்று சித்திரை தேரோட்டத்தில், எங்களது கிராம மக்கள், 100 பேராவது தேர் வடம் பிடித்து, வருவதை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
27-Dec-2025