உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கல்லணை கால்வாய்க்கு வயது 92

கல்லணை கால்வாய்க்கு வயது 92

தஞ்சாவூர்:கல்லணை கால்வாய் என்றழைக்கப்படும் புது ஆறு, தன், 92வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே, சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை, 1925ல் துவங்கி, 1934ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. காவிரி - மேட்டூர் சிறப்பு திட்டம் மூலம், கால்வாய் ஒன்றை, கல்லணையில் இருந்து செங்கிப்பட்டி, கந்தர்வகோட்டை வழியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல, பிரிட்டிஷ் அரசின் ராணுவ பொறியாளர் கர்னல் டபிள்யூ எம்.எல்லீஸ் திட்டமிட்டார். ஆனால், அந்த திட்டம் மாற்றப்பட்டது. கல்லணையில் இருந்து பூதலுார், தஞ்சாவூர் நகர் பகுதி வழியாக, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா போன்ற வறட்சி பகுதி பாசனத்திற்காக பயன்படுத்த கல்லணை கால்வாய் வடிவமைக்கப்பட்டது. இதற்காக கல்லணையில், 1929ல் இருந்து, 1931ம் ஆண்டு வரை, ஆறு மதகுகள் கொண்ட வடிவமைப்பை எல்லீஸ் உருவாக்கினார். பின், 1934, ஆகஸ்ட், 28ல் பாசனத்திற்காக தண்ணீர் முதன் முதலில் திறக்கப்பட்டது. மேலும், கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் மும்பாலை வரை, 149 கி.மீ., நீளமுள்ள இந்த ஆற்றில், 109 கி.மீ., நீளம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளது, சுதந்திர இந்திய அரசால் வெட்டப்பட்டது. கல்லணை கால்வாய் மூலம், 2.56 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், 694 ஏரி, குளங்களும் பயன் பெறுகின்றன. பொதுவாக ஆறுகள் பள்ளத்தை நோக்கி பாயும். ஆனால், கல்லணை கால்வாய், மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும். கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில், கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து, அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சமஉயர் கால்வாய் இது. மேலே காண்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும், அடி நீரோட்டம் வேகமாக இருக்கும். அது மேலே தெரிவதைவிட கீழே, இரண்டு அல்லது, மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி