| ADDED : ஜூலை 11, 2011 11:51 PM
மூணாறு : கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வந்த தேசிய எழுத்தறிவு ஆய்வு மையத்தின் பூட்டை உடைத்து மாணவர் அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் ரோட்டில் மூணாறு அரசு கல்லூரி செயல்படுகிறது. கடந்த 2005ல் பெய்த பலத்த மழையினால் மண் சரிவு ஏற்பட்டு கல்லூரி கட்டடம் முற்றிலுமாக சேதமடைந்தது. மூணாறில் 'பிரீ மெட்ரீக் ஹாஸ்டல்' கட்டடத்திற்கு கல்லூரி மாற்றப்பட்டது.இங்கு போதுமான அளவில் இடவசதி இன்றி கல்லூரி செயல்பட்டு வந்தது.இதற்கிடையில் சேதமுற்ற கல்லூரி கட்டடம் சீரமைக்கப்பட்டு, தேசிய எழுத்தறிவு ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டது.
கல்லூரியை பழைய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆண்டு ஒரு கட்டடம் தவிர மீதமுள்ளவற்றிற்கு கல்லூரி மாற்றப்பட்டது. ஒரு கட்டடத்தில் தேசிய எழுத்தறிவு ஆய்வு மையம் தொடர்ந்து செயல் பட்டு வந்தது. அந்த கட்டடத்தை கல்லூரியிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த வாரம் கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். கல்லூரி கட்டடத்தை திரும்ப ஒப்படைக்காததால், எஸ்.எப்.ஐ.,மாணவர் அமைப்பினர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு, பூட்டிக்கிடந்த ஆய்வு மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். மாணவர்கள் வேறு பூட்டுகளை உபயோகித்து அறைகளை பூட்டினர்.