| ADDED : ஜூன் 20, 2024 05:24 AM
பெரியகுளம்: 'மகளின் படிப்பு செலவிற்காக வீட்டில் வைத்திருந்த நகை, பணம் திருட்டு நடந்து 5 மாதங்கள் ஆகியும் போலீசார் கண்டு பிடித்து மீட்டு தரவில்லை என கலெக்டரிடம் பெண் மனு வழங்கி முறையிட்டார். நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.பெரியகுளம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் ஆலோசனை கூட்டம் சப் --கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.டி.ஆர்.ஒ., ஜெயபாரதி, ஆர்.டி.ஓ., முத்துமாதவன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவமுகாமில் 27 பேருக்கு அடையாள அட்டை, ஒரு வீல் சேர் கலெக்டர் வழங்கினார். அரசு மருத்துவமனையை ஆய்வில் மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ் பாபு, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அன்புச்செழியன், கண்காணிப்பாளர் குமார் சென்றனர். அப்போது ரத்தவங்கியில் கையிருப்பு விபரம் கேட்டார். தற்போது 60 யூனிட் ரத்தம் கையிருப்பில் உள்ளது என்றும், சில நேரம் தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது. மாதம் 7 முதல் 10 ரத்ததானம் முகாம் நடத்தப்படுகிறது என்றனர். மாவட்டத்தில் குடும்பநலத்துறை செயல்பாடுகள் துரிதப்படுத்த கலெக்டர் கூறினார். கூடுதல் மருத்துவமனை கட்டடத்தை பார்வையிட்டார்.அங்கு கலெக்டரிடம், பஞ்சவர்ணம் என்பவர்,'எனது மகள் கல்லூரி படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூ.25 ஆயிரம், 3 பவுன் தங்க செயின் 5 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை குடியிருப்பில் திருடு போனது. தென்கரை போலீசில் புகார் கொடுத்தும் கண்டுபிடிக்கவில்லை. திருடுபோன நகை, பணம் மீட்டு தர', கோரினார். நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்த கலெக்டரிடம், சுதந்திர போராட்ட வீரர் ரங்கசாமியின் வாரிசான தயாளன் மனு அளித்தார். இதில் 2004 ல் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு 12 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டது. ஒரு சென்ட் ரூ.6 ஆயிரம் வீதம் நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு கொடுத்தது. இழப்பீடு குறைவு என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்வழக்கு தொடரப்பட்டதில் ஒரு சென்ட் ரூ.20 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மீதி தொகை வழங்க கோரிக்கை வைத்தனர். டி.ஆர்.ஓ., ஜெயபாரதியிடம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். நில அளவை பிரிவில் தலைமை நில அளவையர் முத்துமாரியிடம், மே மாதம் ஆன்லைனில் பட்டா, பட்டா மாறுதல், தனி பட்டா உட்பட விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 25 க்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.