சீரமைக்கப்படுமா சேதமடைந்த 24 கால்நடை மருந்தக கட்டடங்கள் மருந்துகள், சிகிச்சை கருவிகள் வீணாகும் அவலம்
தேனி : மாவட்டத்தில் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள 24 கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகள் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் நடைபெறுகிறது. பல ஆயிரம் குடும்பங்களில் வருவாய் ஆதாரமாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் நலன் கருதி கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க காலந்டை பராமரிப்பு துறை சார்பில் மாவட்டத்தில் 53 கால்நடை மருந்தகங்கள், 48 கிளை நிலையங்கள், இரண்டு மருத்துவமனைகள், ஒரு கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. கி.மீ.துாரத்திற்கு ஒரு கால்நடை கிளை நிலையம் வீதம் வசதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் பல ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கால்நடை சிகிச்சையளிக்கும் மருந்தகம், கிளை நிலையங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது. பல கட்டங்களில் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கட்டத்திற்குள் மழைநீர் வடிந்து அறைகளுக்குள் தேங்குகிறது. இங்கு மருந்து மாத்திரைகள், சிகிச்சை உபகரணங்கள் மழையால் நனைந்து வீணாகிறது.குறிப்பாக 17 ஊராட்சி பகுதியிலும், 7 பேரூராட்சி பகுதியில் உள்ள கால்நடை சிகிச்சை மையங்கள் பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களில் செயல்படுகின்றன. இவற்றை சீரமைக்க கால்நடை துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லை. இதனால் அவசியம் பராமரிக்கப்பட வேண்டிய கட்டடங்களை போட்டோக்களுடன் பட்டியல் தயாரித்து கலெக்டருக்கு வழங்கி உள்ளாட்சி அமைப்புகள் சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விரைவில் சீரமைக்க உத்தரவிட வேண்டும் அல்லது சிறப்பு நிதி ஒதுக்கி கட்டடங்களை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.