உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி தொகுதியில் 65.38 சதவீத ஓட்டுப்பதிவு இரட்டை ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு அனுமதி மறுப்பு

இடுக்கி தொகுதியில் 65.38 சதவீத ஓட்டுப்பதிவு இரட்டை ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு அனுமதி மறுப்பு

மூணாறு: இடுக்கி லோக்சபா தொகுதியில் 65.38 சதவீத ஓட்டுப்பதிவானது. நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கியது வெயில் சுட்டெரித்ததால் மதியம் ஓட்டு பதிவு சற்று மந்த நிலையில் இருந்தது. பின் மாலையில் மீண்டும் விறுவிறுப்பானது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.இடுக்கி மாவட்டம் பைங் காட்டூர் கூழப்புரம் புனித ஜார்ஜ் ஆரம்ப பள்ளியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ' சிட்டிங்' எம்.பி. டீன் குரியா கோஸ், வாழதோப்பு ஊராட்சியில் மிளகுவள்ளி அங்கன்வாடியில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ஜோய்ஸ்ஜார்ஜ், திருச்சூர் லோக்சபா தொகுதி திருச்சூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குருவிஜயம் ஆரம்ப பள்ளியில் பா.ஜ. கூட்டணி வேட்பாளர் சங்கீதா ஆகியோர் ஓட்டளித்தனர்.தொகுதியில் ஓட்டு பதிவு துவங்கியபோது ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பிரச்னையால் பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு பதிவு பாதிக்கப்பட்டது. மூணாறு அருகே வட்டவடை பழத்தோட்டத்தில் 86, கொட்டாக்கொம்பூரில் 84, தென்மலை எஸ்டேட்டில் 34, 37 ஆகிய ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்து அரை மணி நேரம் ஓட்டு பதிவு பாதிக்கப்பட்டது. இடமலைகுடி ஊராட்சியில் மிளகுதராகுடி 32ம் ஓட்டுச் சாவடியில் 45 நிமிடமும், அடிமாலி அரசு உயர் நிலை பள்ளியில் 125 ம் ஓட்டுச்சாவடியில் ஒரு மணி நேரமும் ஓட்டுபதிவு தடைபட்டது.பழைய மூணாறில் அரசு மேல்நிலை பள்ளியில் 171ம் ஓட்டுச் சாவடியில் ஓட்டளிக்க வந்தவர் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறையாக பட்டனை அழுத்தாமல் 'பவர் சப்ளை' யை காட்டும் சிவப்பு பட்டனை அழுத்தினார். அதனால்' பீப்' சப்தம் வராததால் ஓட்டு பதிவு அதிகாரி உள்பட அனைவரும் குழப்பம் அடைந்தனர். அதன் பிறகு வேறொருவரை ஓட்டு பதிவு செய்ய அனுமதித்தபோது இயந்திரம் செயல்பட்டது. அவருக்கு முன்பு ஓட்டளிக்க இயலாதவரிடம் விசாரித்தபோது அவர் சிவப்பு பட்டனை அழுத்தியதாக தெரிய வந்தது. அதனால் 20 நிமிடம் ஓட்டு பதிவு தடைபட்டது.கள்ள ஓட்டு: தொகுதியில் பல இடங்களில் கள்ள ஓட்டுகள் பதிவான நிலையில் இரட்டை ஓட்டளிக்க வந்தவர்களை கண்டறிந்து அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். உடும்பன்சோலை அருகே செம் மன்னாரில் ஓட்டளிக்க வந்த பெண்ணின் விரலில் மை அடையாளம் இருந்ததால் அவர் தமிழ்நாட்டில் ஓட்டளித்ததாக தெரியவந்தது. அவரை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.குமுளி அருகே சக்குபள்ளத்தில் கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்ற மா.கம்யூ., கிளை செயலாளரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ராஜகுமாரி அருகே கும்பபாறை 16ம் ஓட்டுச் சாவடியில் ஓட்டளிக்க வந்த சுஜானாபாறையைச் சேர்ந்த விஜயன் விரலில் ஓட்டளித்த அடையாளம் இருந்ததால் விசாரித்தபோது அவர் தமிழகத்தில் ஓட்டளித்ததாக தெரியவந்தது. அவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக பதிவு செய்த பின்பு ஓட்டுச் சாவடியை விட்டு வெளியில் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். அதேபோல் கஜானாபாறை 19ம் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்த முருகனின் ஓட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். அதனால் அவர் டெண்டர் முறையில் ஓட்டளித்தார்.டோக்கன்: கீரித்தோடு பகுதியில் 78ம் ஓட்டுச் சாவடி கடும் இட நெருக்கடியுடன் ஓட்டு பதிவு மந்தகதியில் நடந்ததால் மாலை 6:00 மணிக்கு பிறகு 300க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு பதிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ