| ADDED : ஜூலை 31, 2024 06:18 AM
தேனி : தேனியில் ரூ.1.29 லட்சம் மதிப்புள்ள,புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.தேனி சிவாஜி நகரில் எஸ்.ஐ.,கள் சரவணன், ஜீவானந்தம் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே ஒரு ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இருந்த கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்த அன்புசெல்வம் 27, போலீசாரை கண்டதும், ஆட்டோவை விட்டுவிட்டு, தப்பி ஓடினார். போலீசார் ஆட்டோவில் ஆய்வு செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 2 சாக்குகளில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. அதன்பின் வீட்டில் சோதனை செய்தனர். அந்த வீடு சிவாஜி நகர் கருப்பசாமிக்கு சொந்தமானது என தெரியவந்தது. வீட்டில் 13 பெரிய, 8 சிறிய சாக்குகளில் புகையிலைப் பொருட்கள் இருந்தன. ஆட்டோவிலும் வீட்டிலும் ரூ.1.29 லட்சம் மதிப்புள்ள 205. கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள், ஆட்டோவை கைப்பற்றினர். வீட்டின் உரிமையாளர் கருப்பசாமி 45, ஆட்டோ டிரைவர் அன்புச் செல்வம் மீது வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் உதயக்குமார் கூறுகையில், வீட்டிற்கு சீல் வைக்க உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரைத்துள்ளோம்.' என்றார்.