உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டாக்டர்கள் பற்றாக்குறையால் மருத்துவ சேவை கிடைக்காமல் அவதி சின்னமனுார் அரசு மருத்துவமனையின் அவலம்

டாக்டர்கள் பற்றாக்குறையால் மருத்துவ சேவை கிடைக்காமல் அவதி சின்னமனுார் அரசு மருத்துவமனையின் அவலம்

சின்னமனூர்: சின்னமனுார் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ், பணியாளர்கள் பற்றாக்குறையால் பொது மக்கள் தரமான மருத்துவ சேவை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.சின்னமனூர் அரசு மருத்துவனைக்கு தினமும் 600க்கு மேற்பட்ட வெளிநோயாகளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு 54 படுக்கைகளுடன் உள் நோயாளிகள் பிரிவு உள்ளது. இம் மருத்துவமனையை நம்பி சின்னமனுார், குச்சனுார், மார்க்கையன்கோட்டை, புலிகுத்தி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களும், மேகமலை, மணலாறு, ஹைவேவிஸ், வெண்ணியாறு இரவங்கலாறு, மகாராஜா மெட்டு போன்ற மலைக்கிராம மக்களும் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் முறையான சிகிச்சை பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வளாகம் முறையான பராமரிப்பு இல்லாததால் அடர்ந்த காடுபோல் உள்ளது.

கர்ப்பிணிகள் அவதி

இங்கு ஒரு மருத்துவ அலுவலர் மற்றும் ஆறு டாக்டர்கள் பணியில் உள்ளதாக கூறுகின்னர். ஆனால் அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. பிரசவ வார்டில் ஒரு பெண் டாக்டர் உள்ளார். அவரும் பெரியகுளம் மருத்துவமனைக்கு மாற்றப் பணியாக சில நாட்கள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவசரம் என கர்ப்பிணிகள் இங்கு வந்தால் தேனி அல்லது கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவலம் உள்ளது. மாதம் 10 பிரசவங்கள் நடக்கிறது. இதில் சிசேரியன் என்றால் தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி விடுகின்றனர். நோயாகளிகளுக்கு மருந்து மாத்திரை வழங்க கூட பணியாளர் இல்லை. இதற்கு மாற்றுப்பணியாக உத்தமபாளையத்தில் இருந்து ஒருவர் வருகிறார். சிந்த மருத்துவர், ஒடைப்பட்டிக்கு செல்கிறார். ஆய்வத்திலும் இதே நிலை தான். ஆப்பரேஷன் என்பது அத்தி பூத்தாற் போல நடக்கிறது.கோரானா காலத்தில் கட்டப்பட்ட காய்ச்சல் பிரிவு கட்டடம் பூட்டியே உள்ளது. ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு பயன்பாட்டிற்கு வந்தாலும் உரிய வசதிகள் இல்லை. போதிய டாக்டர்கள் இல்லை, சேவை குறைபாட்டால் சிகிச்சை பெற வரும் பொதுமக்களின் எண்ணிக்கை சரிந்து விட்டது. இன்னும் ஒன்றிரண்டு பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவ வசதி கிடைக்கவில்லை

முத்துமணி, சமூக ஆர்வலர், சின்னமனுார் : சின்னமனுார் அரசு மருத்துவமனை பெயரளவில் உள்ளது. இங்கு போதிய டாக்டர்கள் இல்லை. முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால் நோயாளிகள் வருகை குறைந்து விட்டது. பெண் டாக்டர் இல்லை என்பதை அறிந்த கர்ப்பிணிகள் இங்கு வருவதை தவிர்த்து விட்டனர். இரவில் அவசர சிகிச்சைக்கென வருபவர்களின் நிலைமை உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக இம் மருத்துவமனை மேம்பாட்டிற்கு எந்த வசதிகளும் மக்கள் நல்வாழ்வு துறை மேற்கொள்ள வில்லை.

சேவை குறைபாடு அதிகம்

விஜயகுமார், வியாபாரி, சின்னமனுார்: இம் மருத்துவமனையில் சேவை குறைபாடு அதிகம். பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இங்கு டாக்டர்கள், படுக்கைகள், நவீன லேப், எக்ஸ்ரே, பிரசவ வார்டுக்கான பெண் டாக்டர்கள் என எதுவும் இல்லை. எம்.எல்.ஏ. நிதியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு பயன்பாடு இன்றி பூட்டியே உள்ளது. தேவையான டாக்டர்கள், நர்சுகள், ஆப்பரேசன் தியேட்டர், எக்ஸ்ரே பிரிவு, கூடுதல் வசதிகளுடன் கூடிய லேப், ஸ்கேன், தீக்காய சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவ அலுவலர் சிவக்குமார் கூறுகையில், இருக்கும் டாக்டர்களை வைத்து முடிந்தளவு சேவை செய்கிறோம். வசதிகள் என்னென்ன தேவை என்பதை அரசிற்கு கடிதம் எழுதி உள்ளோம். அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி