தேனி:தேனி அருகே சமையல் காஸ் ஏஜன்சி லாப தொகை, 1 கோடி ரூபாயை பங்குதாரருக்கு வழங்காமல் ஏமாற்றிய, மற்றொரு பங்குதாரர், அவரது மனைவி, ஏஜன்சி கணக்காளர் ஆகிய மூவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம், 48. அன்னஞ்சியை சேர்ந்தவர் சம்பத், 50. இருவரும் நண்பர்கள். 2008 ஆக., 12ல் இரு குடும்பத்தினரும் சேர்ந்து 'பாரத் பம்ப் ஹவுஸ்' என்ற பெயரில் கனரக வாகனங்களில் உள்ள டீசல் பம்ப் சர்வீஸ் தொழில் செய்தனர்.பின், ராஜரத்தினம், சம்பத் இணைந்து, 2010 ஆக., 11ல் பி.பி.சி.எல்., நிறுவனத்தில் இருந்து எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோகம் செய்யும் காஸ் ஏஜன்சி நடத்த, சம்பத் பெயரில் விண்ணப்பித்தனர்.கடந்த, 2013 மே 17ல் பி.பி.சி.எல்., நிறுவனத்தில் இருந்து சம்பத் பெயரில் கடிதம் கிடைக்கப் பெற்றது. இதனால், 2013 மே 30ல் கேரளா, ராஜகுமாரியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஊஞ்சாலம்மன் பாரத் காஸ் ஏஜன்சி பங்குதாரர்களாக ராஜரத்தினம், சம்பத்தும் ஒப்பந்தம் செய்து பதிவு செய்தனர்.பின் பல்வேறு நாட்களில் தொழிலுக்கு முதலீடாக ராஜரத்தினத்திடம் வங்கி மற்றும் நேரடியாக, 20 லட்சம் ரூபாயை சம்பத், அவரது மனைவி சவீதா பெற்று, சிறு சிறு லாபதொகையை மட்டும் வழங்கினர்.சம்பத் அவரது மனைவி சவீதா, ஏஜன்சியில் கணக்காளராக பணியாற்றிய தேனி முத்துலட்சுமி ஆகிய மூவர் இணைந்து காஸ் ஏஜன்சியில் கிடைக்கும் லாபப் பணம் உள்ளிட்ட விபரங்களை ராஜரத்தினத்திடம் காண்பிக்காமல் மறைத்தனர்.இதனால் ஏற்பட்ட பேச்சின்படி, பங்குதாரர்கள் இருவரும் ஆடிட்டர் வாயிலாக ராஜரத்தினத்திற்கு கிடைக்க வேண்டிய தொகை குறித்து கணக்கு விபரங்களை தணிக்கை செய்தனர். அதில், லாப பங்குத்தொகை, 1 கோடி ரூபாயை வழங்காமல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து, சம்பத், அவரது மனைவி ஆகியோரிடம் ராஜரத்தினம் கேட்டார். அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்டவர் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.எஸ்.பி., உத்தரவில் ஊஞ்சாலம்மன் பாரத் காஸ் ஏஜன்சி பங்குதாரர் சம்பத், அவரது மனைவி சவீதா, கணக்காளர் முத்துலட்சுமி ஆகிய மூவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி வழக்குப்பதிவு செய்துள்ளார்.