உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேல்மங்கலம் சிவன் கோவில் பாண்டியர் கல்வெட்டு படியெடுப்பு

மேல்மங்கலம் சிவன் கோவில் பாண்டியர் கல்வெட்டு படியெடுப்பு

சென்னை:தேனி மாவட்டம், மேல்மங்கலம் மாயபாண்டீஸ்வரர் கோவிலில் உள்ள பாண்டியர் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறை படியெடுக்கிறது. மத்திய தொல்லியல் துறையின், தென் மண்டல ஆலய ஆய்வு திட்டத்தின், சென்னை பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் பிரசன்னா, வீரமணிகண்டன் உள்ளிட்டோர், கடந்த பிப்ரவரி மாதம், தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள பழமையான கோவில்களை ஆய்வு செய்தனர். அங்கு, இதுவரை பதிப்பிக்கப்படாத கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.இதுகுறித்து, தென்மண்டல கல்வெட்டு பிரிவுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அதன் இயக்குனர் முனிரத்தினம், அவற்றை படியெடுக்கும்படி உத்தரவிட்டார். சென்னை கல்வெட்டு பிரிவு இயக்குனர் இயேசு பாபுவின் தலைமையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் படியெடுக்கும் பணியை, நேற்று முன்தினம் துவக்கினர்.

சோழ, பாண்டிய பிரம்மதேயம்

இதுகுறித்து, வீரமணிகண்டன் கூறியதாவது: இந்த ஊரில், ஒரு சிவன் கோவில், இரண்டு பெருமாள் கோவில்கள் உள்ளன. இவற்றின் சுவர்களில் சுண்ணாம்பு அடித்திருந்ததால் கல்வெட்டு இருந்தது தெரியவில்லை. தற்போதைய ஆய்வில், பதிப்பிக்கப்படாத கல்வெட்டுகள் இருப்பதை அறிந்தோம். தற்போது, மேல்மங்கலம் மாயபாண்டீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து வருகிறோம்.இங்குள்ள துாண்களில் 12 கல்வெட்டுகள், சுவர்களில் எட்டு கல்வெட்டுகள் மற்றும் இரண்டு துண்டு கல்வெட்டுகளை கண்டறிந்து படியெடுத்து வருகிறோம். அதைத் தொடர்ந்து, அருகில் உள்ள பெருமாள் கோவிலின் தெற்கு, வடக்கு சுவர்களில் தலா ஒன்று; கருவறையில் இரண்டு, மண்டபத்தில் ஒன்று என மொத்தம் ஐந்து துண்டு கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளோம். அவற்றையும், அடுத்து பெருமாள் கோவில் கல்வெட்டுகளையும் படியெடுக்க உள்ளோம். அவற்றின் தகவல்கள், மத்திய கல்வெட்டியல் இதழில் அடுத்தாண்டு இடம்பெறும். இவ்வூரில் உள்ள கோவில்கள், சோனாடு வழங்கிய சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் சிறப்பான வழிபாட்டில் இருந்துள்ளன. அப்போது, இவ்வூர் மேல்நெடுங்கல நாடு என்ற நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. சோழர்களை வென்ற சுந்தரபாண்டியன், பிரம்மதேயமாக இருந்த இவ்வூரை மீண்டும் அவர்களுக்கே தந்ததால், 'முடிவழங்கு பாண்டிய சதுர்வேதி மங்கலம்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

நல்லிணக்கம்

இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் கல்வெட்டில், சிவன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் கூட்டாக நிலதானம் வழங்கிய செய்தி உள்ளது. இதனால், 12ம் நுாற்றாண்டில், சைவ - வைணவ நல்லிணக்கத்துடன் மக்களும் மன்னர்களும் இருந்ததை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ