| ADDED : ஏப் 06, 2024 04:41 AM
தேனி : பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க தி.மு.க., உடன் பழனிசாமி கள்ள கூட்டணி வைத்துள்ளார் என தேனி பிரசாரத்தில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பேசினார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனி தொகுதி போட்டியிடும் அ.ம.மு.க.,வேட்பாளர் தினகரன் தேனி பழனிசெட்டிபட்டி, வீரபாண்டியில் பிரசாரம் செய்து பேசுகையில், ' பழனிசாமியை முதல்வர் ஆக்கியதற்கு பரிசாக என்னை கட்சியில் இருந்து நீக்கினார். பணம் கொடுத்து ஓட்டு கேட்பது, மக்களின் வரிபணத்தை கொடுத்து ஓட்டு கேட்பதாகும். பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவி ஏற்பார். அவரிடம் தொகுதிக்கும் , தமிழகத்திற்கும் தேவையான திட்டங்களை கேட்டு பெறுவேன். இண்டியா கூட்டணி, பழனிசாமிக்கு யார் பிரதமர் என முடிவு செய்யாமல் ஓட்டு கேட்கின்றனர். அவர்கள் வந்தால் யார் பிரதமர் என கேட்க வேண்டும். கேரளாவில் இண்டியா கூட்டணியில் கம்யூ., காங்., எதிர்த்து போட்டியிடுகின்றன.ஸ்டாலின் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் ரூ.ஆயிரம் என்கிறார். பொய் சொல்வதில் அப்பா, தாத்தாவை மிஞ்சிவிட்டார் அமைச்சர் உதயநிதி. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு என்றார். அதற்காக ஒரு கோடி கையெழுத்து வாங்கி குப்பையில் போட்டனர்.பா.ஜ., கூட்டணிவெற்றியை தடுக்க தி.மு.க., உடன் பழனிசாமி கள்ள கூட்டணி வைத்துள்ளார். இரட்டை இலையை தவறாக பயன்படுத்துகிறார். அவரது ஆட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக கைது செய்ய வேண்டாம் என தி.மு.க.,வுடன் மறைமுக ஒப்பந்தம் செய்துள்ளனர். பழனிசாமியும் தேர்தலில் நின்றிருக்கலாம். தேனியில் வெற்றி பெற்றால் வீரபாண்டி கோவிலுக்கு ராஜகோபுரம் அமைத்து தருவேன் என்றார்.