உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறப்பு நிலை பேரூராட்சி இல்லாததால் செயல் அலுவலர்கள் பதவி உயர்வில் சிக்கல்

சிறப்பு நிலை பேரூராட்சி இல்லாததால் செயல் அலுவலர்கள் பதவி உயர்வில் சிக்கல்

கம்பம்: தேனி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சிகள் இல்லாததால் செயல் அலுவலர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் மக்கள் தொகை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கிரேடு வாரியாக தரம் பிரித்துள்ளனர்.பேரூராட்சிகளில் இரண்டாம் நிலை, முதல் நிலை, தேர்வு நிலை, சிறப்பு நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் இரண்டாம் நிலை பேரூராட்சியில் இருந்து பணியாற்றி படிப்படியாக அனைத்து நிலை பேரூராட்சிகளிலும் பணியாற்றும் செயல் அலுவலர்களுக்கு மட்டுமே உதவி இயக்குனர் பதவி உயர்வு கிடைக்கும்.தேனி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சி ஒன்று கூட இல்லை. சிறப்பு நிலை இல்லாததால், இந்த மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களாக பணியாற்றுபவர்கள் பலரும் சிறப்பு நிலைக்கு தொலை தூர மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.பலர் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை நெருங்குவதால் பதவி உயர்வே வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடுகின்றனர்.இது தொடர்பாக செயல் அலுவலர்கள் கூறுகையில், தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளன.இரண்டாம் நிலை 59, முதல் நிலை 190, தேர்வு நிலை 179, சிறப்பு நிலை 62 என உள்ளது. தமிழகம் முழுவதுமே சிறப்பு நிலை குறைவாக இருப்பதால், பெரும்பாலான செயல் அலுவலர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னரே ஓய்வு பெறும் நிலை உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் சிறப்பு நிலை பேரூராட்சிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை