| ADDED : மே 24, 2024 03:22 AM
மூணாறு: தென் மாநிலங்கள் அளவிலான ஒருங்கிணைந்த காட்டு யானைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.தென்னிந்திய அளவில் ஆண்டுக்கு ஒருமுறை காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து யானைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. அதன்படி கேரளாவில் நான்கு யானைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு நடக்கிறது. ஆனைமுடி யானைகள் சரணாலயத்தில் 197, நீலம்பூரில் 118, பெரியாறு 280, வயநாடு 89 பிளாக்குகளில் கணக்கெடுப்பு நடக்கிறது. அதற்கு 1300 வனத்துறை அதிகாரிகள் மற்றும் வாச்சர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நேரடி முறையிலும், இன்று (மே 24) மறைமுகமான கால்தடம், சாணம் ஆகியவற்றின் மூலமும், நாளை (மே 25) நீர் நிலைகள் மற்றும் திறந்த வெளி முறையிலும் கணக்கெடுப்பு நடக்கிறது. கேரளாவில் 1920 முதல் 2386 வரை எண்ணிக்கையில் காட்டு யானைகள் உள்ளதாக கடந்தாண்டு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.