| ADDED : ஆக 04, 2024 06:11 AM
கம்பம் : தேனி மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் 'அக்ரோ பாரஸ்ட்ரி' அமைக்க ஒரு நபருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எட்டு வட்டாரங்களில் கூடுதல் அலகு ஒதுக்கீடு செய்ய இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சீதோஷ்ண நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வனப்பரப்புக்களை அதிகரிக்கும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மூலமாக 'அக்ரோ பாரஸ்ட்ரி' உருவாக்கி, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் கூறியதாவது:அக்ரோ பாரஸ்ட்ரி திட்டம் சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று வகையாக உள்ளது. சிறிய நர்சரி ரூ.2.5 லட்சம், நடுத்தர நர்சரி ரூ.5 லட்சம், பெரியது ரூ.10 லட்சத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். தேனி மாவட்டத்திற்கு நடுத்தர நர்சரி ஒன்றுக்கு அனுமதி கிடைத்துள்ளது.1.5 ஏக்கர் நிலத்தில் 200 சதுர மீட்டரில் நிழல் வளை, 100 சதுர மீட்டர் பரப்பில் மிஸ்ட் சேம்பர் அமைக்க வேண்டும். இந்த மிஸ்ட் சேம்பரில் தேக்கு, மகாகனி, குமிழ் உள்ளிட்ட மரக்கன்றுகளை வளர்த்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இந்த அக்ரோ பாரஸ்ட்ரியை சுற்றி வேலி அமைக்க வேண்டும்.இதற்கு ரூ.10 லட்சம் செலவாகும். அதில் 50 சதவீத மானியமாக ரூ.5 லட்சம் தரப்படும்.', என்றார். தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களுக்கும் ஒருவருக்கு மட்டுமே வழங்க அனுமதி கிடைத்துள்ளது. வனப்பரப்பை அதிகரிக்க எடுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேளாண் துறை பரிந்துரை செய்ய வேண்டும். சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்றிலும் எட்டு வட்டாரங்களுக்கு தலா ஒருவருக்கு வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.