| ADDED : மே 03, 2024 02:24 AM
தேனி:தேனியில் மிளகாய் பொடி துாவி முன்னாள் ராணுவவீரர் ராஜபிரபுவை கடத்திய ராணுவ வீரர் குரலரசன் 24 உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.தேனி பள்ளபட்டி ராஜபிரபு 26. ராஜஸ்தான், ஜம்முவில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பின், விருப்ப ஓய்வு பெற்றார். தேனி தனியார் நிறுவனத்தில் 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' பணியில் உள்ளார். இவர் மதுரை மாவட்டம், செல்லம்பட்டியை சேர்ந்த, ஜம்மு, உத்தம்பூரில் ராணுவவீராக பணிபுரியும் குரலரசனை மார்க்கெட்டிங் பணியில் சேர்த்தார். 3 ஆண்டுகளாக வியாபாரம் செய்த குரலரசன், ராஜபிரபு வங்கிக்கணக்கில் ரூ.6 லட்சம் செலுத்தினார். அதனை குரலரசனுக்கு ஒதுக்கப்பட்ட வியாபார கணக்கில் ராஜபிரபு செலுத்தினார். மேற்கொண்டு வியாபாரத்தில் ஆட்களை சேர்க்க முடியாத குரலரசன் பணத்தை திருப்பித்தர ராஜபிரபுவிடம் கேட்டார். அதற்கு அவர், வியாபாரத்திற்கான வங்கிக் கணக்கில் செலுத்தியது திருப்பி எடுக்க முடியாது என்றார்.பணம் கிடைக்காததால் குரலரசன் ஆத்திரமடைந்தார். இதனால் ஏப்., 29 ம் தேதி தேனி கொடுவிலார்பட்டி, - பள்ளபட்டி அருகில் தனியார் தோட்டம் அருகே குரலரசன், தனது நண்பர்கள் செல்வபாண்டி 26, திருப்பூர் கொழிஞ்சிவாடியை சேர்ந்த நாகராஜ் 21, விக்னேஷ் 24, ஆகியோருடன் சேர்ந்து ராஜபிரபுவை வரவழைத்து அவர் மீது மிளகாய் பொடியை துாவினர். பின் ராஜபிரபுவை ஆம்னி வேனில் ஏற்றி, தாராபுரம் அருகே உள்ள கோழிப்பண்ணைக்கு கடத்தி சென்று அடைத்து வைத்தனர். அங்கு ராஜபிரபுவிடம் இருந்த டூவீலர் (புல்லட்) ஐ போன், நான்கு பவுன் தங்கச் செயின், 4 மோதிரங்களை கைப்பற்றினர். ராஜபிரபு ஏப்., 30ல் தப்பித்து கார் மூலம் தேனி வந்து புகார் அளித்தார். பழனிச்செட்டிபட்டி போலீசார் குரலரசன், செல்வப்பாண்டி, நாகராஜ், விக்னேஷ் நால்வரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.