ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், அம்மச்சியாபுரம் அருகேயுள்ள கருங்குளம், செங்குளம் கண்மாய்களை தூர்வாரி கூடுதல் நீர் தேக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.60 ஏக்கர் பரப்புள்ள கருங்குளம், 50 ஏக்கர் பரப்புள்ள செங்குளம் கண்மாய்கள் அடுத்தடுத்து உள்ளன. வருஷநாடு மூல வைகை ஆற்றில் இருந்து மழைக்காலத்தில் வரும் நீரை வாய்க்கால் வழியாக 4 கி.மீ., தூரம் கொண்டு சென்று இக்கண்மாய்களில் தேக்கி அம்மச்சியாபுரம், குன்னூர் பகுதியில் விவசாயம் செய்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக கண்மாய்களின் நீர்வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லை. நீர்வரத்து கால்வாயின் கரைகள் பல இடங்களில் சேதம் அடைந்தும், கண்மாய் நீர்த்தேக்க பரப்பில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. கண்மாயில் பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் தேக்கப்படும் நீரின் அளவு குறைந்து பாசனப்பரப்பும் குறைகிறது.இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கால்வாய் துார்வார வேண்டும்
சுப்பிரமணி, விவசாயி, அம்மச்சியாபுரம்: வருஷநாடு மூல வைகை ஆற்றில் அதிகளவு நீர் வரத்து இருந்தாலும் பராமரிப்பில்லாத கால்வாய் வழியாக குறைந்த அளவு நீரே கிடைக்கிறது. சின்ன சங்ககோணாம்பட்டி அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து 4 கி.மீ., தூரம் வாய்க்கால் மூலம் கண்மாய்களுக்கு நீர் கொண்டுவரப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணையை மறு சீரமைப்பு செய்து கால்வாய்களை தூர்வார வேண்டும். கண்மாய்கள் நிரம்பிய பின்பும் கால்வாய் நீரை நேரடியாக பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். கால்வாயில் அதிக நீர் கிடைத்தால் கூடுதல் ஏக்கரில் விவசாயம் செய்ய முடியும். தற்போது அம்மச்சியாபுரம், குன்னூர் கிராமங்களைச் சேர்ந்த 5000 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகிறது. கண்மாயை தூர்வாரினால் கோடை காலத்திலும் பாதிப்பின்றி விவசாயத்தை தொடர முடியும். வாய்க்கால்கள் துார்வார வேண்டும்
முத்துச்சாமி, விவசாயி, அம்மச்சியாபுரம்: கண்மாய் மற்றும் நீர் வரத்து வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் துவங்குவதற்கு முன் சிறு சிறு பராமரிப்பு பணி செய்வது இல்லை. கண்மாய் கரையை ஒட்டி குன்னூர், அம்மச்சியாபுரம் கிராமங்களுக்கு இணைப்பு ரோடு உள்ளது. 3 கி.மீ., தூரம் உள்ள இந்த ரோடு வழியாகவே விவசாயிகள் செல்ல முடியும். 26 அடி அகலம் உள்ள இந்த ரோடு தற்போது வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளது. விவசாயிகள் இடுபொருட்கள், விளை பொருட்களை கொண்டு செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். நீர் வரத்து கால்வாய்களை முழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். கருங்குளம், செங்குளம் கண்மாய்கள் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. கண்மாய் பராமரிப்பில் ஒவ்வொரு ஆண்டும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.