| ADDED : ஜூன் 11, 2024 07:17 AM
தேனி : அல்லிநகரம் கவுமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். இக்கோயிலின் வைகாசி திருவிழாவை யொட்டி தினமும் அம்மன் அன்ன வாகனத்தில் மின் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மண்டகப்படியில் எழுந்தருளிய அம்மன் கோயில் மூலஸ்தானம் வந்தடைந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை துவங்கியது. முன்னதாக பல்வேறு புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உற்ஸவம் திருத்தேரில் ஏற்றப்பட்டு, சக்தி ஏற்றுதல் நடந்தது. பின் மாலை கோயில் நிர்வாகிகள், அல்லிநகரம் கிராம கமிட்டியாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிழக்கு நுழைவாயில் பகுதியில் இருந்து தெற்கு பகுதி, மேற்கு, வடக்குப் பகுதிக்கு வந்தடைந்து பின், கிழக்கு வாசலில் நிலை நிறுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர். பின் அம்மன் வீதிகளில் உலாவந்து இரவு கோயில் மூலஸ்தானத்திற்கு சென்றடைந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று பூப்பலக்கில் அம்மன் அல்லிநகரம் கோயில் வீடு செல்லும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், அல்லிநகரம் கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.