| ADDED : மே 24, 2024 03:21 AM
உத்தமபாளையம்: 20 ஆண்டுகளுக்கு பின் கோம்பை திருமலைராயப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என கோஷம் எழுப்பி வடம் பிடித்து இழுத்து சென்றனர்.கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ராமக்கல் மலையில் ரங்கநாதர் தெற்கு திசையில் தலைவைத்து, வடக்கில் கால் நீட்டி, கோம்பை நகரை பார்த்த வண்ணம் உள்ளார். சுயம்புவாக எழுந்தருளிய ரங்கநாதர் கோயில் தேர் தமிழகத்தில் உள்ள பெரிய 12 தேர்களில் இதுவும் ஒன்றாகும். தேர் மிக பிரசித்தி பெற்றது.கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டத்தை, ஜமீன்தார், பரம்பரை அறங்காவலர் சீனிவாசராயர் தலைமையில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து இந்தாண்டு நடத்த முடிவு செய்தனர்.தேரோட்ட கொடியேற்றம் மே 12 ல் நடந்தது. கொடியேற்ற நாளில் கோம்பை ஜமீன் வீட்டிலிருந்து செங்கோல் கொண்டு செல்லப்படும். சுவாமி, தம்பதி சகிதமாக தேரில் செங்கோலுடன் வலம் வருவார். தேரோட்டம் முடிந்து, மலைக்கோயிலிற்கு சுவாமி திரும்பும் போது, செங்கோல் மீண்டும் ஜமீன் வீட்டில் ஒப்படைக்கப்படும். இது நடைமுறை.நேற்று முன்தினம் தேர் அடிப் பெயர்த்து நிறுத்தப்பட்டது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சதிதமாக ரங்கநாதர் தேரில் ஏறினார். அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று மாலை பரம்பரை அறங்காவலர், ஜமீன்தார் சீனிவாசராயர் தலைமையில் அனைத்து சமுதாய பிரமுகர்களும், எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், தி.மு.க.,வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், ஹிந்து அறநிலைய துறை இணை ஆணையர் பாரதி, செயல் அலுவலர் அருணா தேவி முன்னிலையில் தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு கோவிந்தா.. கோவிந்தா.. என கோஷம் எழுப்பி தேர் வடம் பிடித்து இழுத்தனர்.கிழக்கு ரதவீதியிலிருந்து 4:10 மணிக்கு கிளம்பிய தேர் தெற்கு ரத வீதி வந்து, மேற்கு ரத வீதியில், கோயில் அருகில் மாலை 5: -45 மணிக்கு நிறுத்தப்பட்டது. நாளை ( மே, 24) மதியம் 3:00 மணியளவில் மீண்டும் - தேரோட்டம் துவங்கி வடக்கு ரத வீதி வழியாக சென்று நிலை நிறுத்தப்படும்.தேரோட்டத்தை முன்னிட்டு பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.