| ADDED : மே 26, 2024 04:32 AM
சின்னமனூர்: சின்னமனூரில் சங்கிலித்தேவன் கண்மாய் நடைப்பயிற்சி தளத்தில் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடைபயிற்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சின்னமனூர் நகராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த சங்கிலித்தேவன் கண்மாய், விஸ்வக்குளம் கண்மாய்களை மீட்டு ரூ.2 கோடியில் நகராட்சி சார்பில் புனரமைத்தனர். இதில் சங்கிலித்தேவன் கண்மாயை சுற்றி நடைப்பயிற்சி தளம், ஆங்காங்கே இருக்கைகளுடன் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. தற்போது தினமும் காலை, மாலையிலும் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் இக் கண்மாயை சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். சிலர் இரவு 8:00 மணி வரை நடைப்பயிற்சி செய்கின்றனர். ஆனால் தொடர் பராமரிப்பு இல்லாததால் கண்மாயின் கிழக்கு பகுதியில் நடைபயிற்சி மேடையை ஒட்டி செடி கொடிகள் வளர்ந்து புதர்களாக மாறி உள்ளது. புதர்களை அகற்ற வேண்டும். மேலும் கண்மாயின் தென்மேற்கு மூலையில் வேலி சேதப்படுத்தப்பட்டு, இரவில் சமூக விரோதிகள் நடைப்பயிற்சி மேடையை தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே சுற்றிலும் வேலியை பராமரிக்க வேண்டும். நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் நடைப்பயிற்சிக்கு வருவதால் குடிநீர் வசதி செய்திட நகராட்சி முன்வர வேண்டும் என்று நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.