கம்பம் பள்ளத்தாக்கில் 2ம் போக நெல் அறுவடை துவக்கம் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தல்
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இரண்டாம் போக நெல் அறுவடை துவங்கியுள்ளது. நெல் கொள்முதல் நிலையம் துவக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மழை, கூடுதல் பனி என பல்வேறு சிரமங்களுக்கிடையே சாகுபடி செய்து நெற்பயிரை விளைவித்துள்ளனர். தற்போது கம்பம் ஆங்கூர் பாளையம், மஞ்சக் குளம், சாமாண்டிபுரம் போன்ற பகுதிகளில் அறுவடை துவங்கி உள்ளது. காமயகவுண்டன்பட்டி ரோட்டில் அறுவடை ஆரம்பமாகிறது. அறுவடையாகும் நெல்லை வியாபாரிகள் 60 கிலோ மூடை ரூ. 1200 முதல் 1400 வரை வாங்குகின்றனர். ஆனால் கடந்தாண்டை விட மூடைக்கு ரூ.100 வரை குறைந்துள்ளது.அறுவடை துவங்கும் போது கொள் முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழகம் முன்வருவதில்லை. இச் சூழலை பயன்படுத்தி வியாபாரிகள் உடனே ரொக்கம் என்ற ஆசை வார்த்தையை கூறி விலையை குறைத்து வாங்கி செல்கின்றனர். அறுவடை முடிந்த பின் கொள்முதல் நிலையம் துவங்குவது தான் நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகத்தின் வாடிக்கையாக உள்ளது.கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன் கூறுகையில், கம்பத்தில் அறுவடை துவங்கி உள்ளது. அரசின் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி உள்ளோம். ஆனால் நுகர்பொருள் வாணிப கழகம் திறக்கும் முன் அறுவடையே எல்லாம் முடிந்து விடும் போல் தெரிகிறது. விரைந்து கொள்முதல் நிலையம் திறக்க வேளாண் துறை, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்றார்.கம்பம் வேளாண் உதவி இயக்குநர் பூங்கோதை கூறுகையில், 'ஒரு பகுதியில் தற்போது அறுவடை துவங்கியுள்ளது.அறுவடைக்கு எவ்வளவு எக்டேர் தயாராக உள்ளது என்பதை ஆய்வு செய்து கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்', என்றார்.