| ADDED : மே 16, 2024 02:07 AM
கம்பம்:மேகமலை பகுதியில், ஒரு வாரமாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், சுருளி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவி முக்கியமானதாகும். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதாலும், அருவிக்கு வரும் தண்ணீர் உயரமான மலையிலிருந்து பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் மீது பட்டு வருகிறது.இதனால், அருவி தண்ணீரானது தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது ஐதீகம். எனவே, ஆண்டு முழுதும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணியர் இங்கு குளிக்க வருகின்றனர்.பொதுவாக கோடையில் அருவியில் தண்ணீர் இருக்காது. வறண்டு போகும். இந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து அருவிக்கு தண்ணீர் வரத்து இல்லை.ஒரு வாரமாக மேகமலை பகுதியில் குறிப்பாக இரவங்கலாறு பகுதியில் தொடர்ந்து சாரல் பெய்து வருவதால், அருவிக்கு தண்ணீர் வரத்து நேற்று முன்தினம் மதியம் முதல் ஆரம்பமானது. நேற்று காலையில் போதிய அளவு தண்ணீர் வருகிறது. சுற்றுலாப் பயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.