செப்., 14ல் மெகா லோக் அதாலத்; மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி தகவல்
தேனி : தேனி மாவட்டத்தில் செப்., 14ல் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்க உள்ளது.' என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி வட்ட சட்டப் பணிகள் குழுவில் வரும் செப்., 14ல் லோக் அதாலத் அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நடக்க உள்ளது. இதில் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது. வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், சமரச தீர்வுக்கான குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீட்டு வழக்குகள், கல்விக்கடன், வங்கிக்கடன், வாராக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள், வருவாய்த்துறை வழக்குகள், இதர பொது பயன்பாட்டிற்கான சேவை வழங்குதலில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இதில் தீர்க்கப்படாத பிரச்னைகளை சுமூகமாக தீர்க்க பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.