மேலும் செய்திகள்
நெல் மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை
07-Feb-2025
தேவதானப்பட்டி : மேல்மங்கலம் பகுதியில் முளைப்பு திறன் குறைந்த நெல் விதைகளால் விளைச்சல் பாதியாக குறைந்தது என விவசாயிகள் புலம்புகின்றனர்.பெரியகுளம் தாலுகா, மேல்மங்கலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காலம், கோடை என இரு போகம் நெல் சாகுபடி செய்யப்படும். தற்போது இரண்டாம் போகம் நெல் அறுவடை நடக்கிறது. ஒவ்வொரு சீசனுக்கும் 41 கிலோ எடையிலான நெல் மூடை 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்வர். இங்கு நெல் சாகுபடி பரப்பு அதிகம் என்பதால் இரு இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மூடை ரூ.980 வீதம் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூ.2.50 கோடி முதல் ரூ. 3 கோடிக்கு வர்த்தகம் நடக்கும். ஆனால் இம்முறை போதிய மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். விதை நெல் முளைப்பு திறன் இல்லை
சுரேஷ்,விவசாயி, மேல்மங்கலம்: மதுரை தனியார் விதை விற்பனை மையத்திலிருந்து புதிய ரகமான 'எம்.டி.யூ.1010' விதை ஒரு கிலோ ரூ.50 வீதம் வாங்கி விதைத்தோம். இந்த விதையில் முளைப்புதிறன் இல்லாததால் விளைச்சல் பாதித்தது. ஏக்கருக்கு சராசரியாக 80 மூடை வந்த நிலத்தில் தற்போது 40 மூடை கிடைத்துள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது. தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் செய்கிறோம். நூறு ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மூடை குறைந்தது
இரு நெல் கொள்முதல் நிலையத்தில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மூடைகள் கிடைக்கும். இம் முறை விளைச்சல் பாதிப்பால் 15 ஆயிரம் மூடைகள் மட்டுமே வந்துள்ளது. வேளாண் உதவி இயக்குனர் மணிகண்ட பிரசன்னா கூறுகையில்: மேல்மங்கலத்தில் தனியாரிடம் எம்.டி.யூ.1010 விதை நெல் வாங்கி விதைத்துள்ளனர். 120 முதல் 130 நாட்கள் வளரக்கூடிய மத்திய கால ரகம். 105 நாட்கள் முதல் 110 நாட்கள் வளரக்கூடிய ரகம் பயிரிட்டிருக்க வேண்டும். வேளாண் துறை வழங்கிய கோ. 55, ஏ.டி.டி., 54 ரகங்கள் தாமரைக்குளம், வடுகபட்டி, ஜெயமங்கலம் பகுதியில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது என்றார்.--
07-Feb-2025