| ADDED : மார் 30, 2024 12:21 AM
தேனி:'கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் படிவம் பூர்த்தி செய்து பணம் கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ய மாட்டார்கள்' என வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள், சிறு, குறு வியாபாரிகள் வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல, 1 லட்சம் ரூபாய் வரை அனுமதிக்க வேண்டும்.வியாபார நிறுவன 'லெட்டர் பேடில்' எடுத்துச் செல்லும் பணத்தின் விபரம் எழுதியிருக்கும் படிவத்தை பறக்கும் படை, நிலைக்குழு அதிகாரிகள் ஏற்க கோரி, தமிழ்நாடு வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கம் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.ஆனால், வியாபாரிகள் 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிமுறைகளை பின்பற்றி, பணம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கிறது. இப்பிரச்னைகளை தீர்க்க வங்கி கணக்கு வைத்துள்ள சிறு, குறு வியாபாரிகள், வணிகர்கள் அந்தந்த வங்கிகளில் இதற்கான படிவம் பெற்று, பூர்த்தி செய்து மேலாளரிடம் ஒப்புதல் பெற்று, பணம் கொண்டு செல்லலாம்.இதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்ய மாட்டார்கள் என தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலரிடம் இதுகுறித்து விழிப்புணர்வு இன்றி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். தேனி மாவட்ட தேர்தல் பிரிவு போலீசார் கூறியதாவது:தேர்தல் கமிஷன், சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு படிவம் வழங்கி முறையாக பண பரிமாற்றம் நடக்க வழி வகை செய்திட வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுத்துறை, தனியார் வங்கிகளில் படிவம் வழங்க சிறப்பு கவுன்டர்களை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.இப்படிவம் பெற்று வருவோரிடம் பறக்கும்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பணம் பறிமுதல் செய்ய மாட்டார்கள். இதுமட்டுமின்றி பணம் எடுத்த விபரம் தொடர்பாக 'கியூ ஆர் கோடு' வழங்கப்படும். இதனால் வியாபாரம், வணிக நடைமுறைகள் தடையின்றி நடக்கும்.இவ்வாறு கூறினர்.