முல்லைப்பெரியாறு அணை ஆய்வு ஒத்திவைப்பு
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய புதியதாக அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவினரின் முதல் ஆய்வு மார்ச் 22 க்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த அணையில் நடக்கும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் காஷ்யப் தலைமையில் மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணையில் நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வந்தது.இந்நிலையில் 2024 அக்., 1 முதல் அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏற்கனவே பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டன.புதியதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் மற்றும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் என 7 பேர் உள்ளனர்.புதிய கண்காணிப்பு குழுவினர் மார்ச் 7ல் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இக்குழுவின் முதல் ஆய்வு மார்ச் 22க்கு ஒத்திவைக்கப்பட்டதாக தமிழக நீர்வளத் துறை அறிவித்துள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள 2 கேரள அதிகாரிகளை நீக்க கோரி தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது குழுவின் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.