தேனி : தமிழகத்தில் முதன் முதலாக தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் ஆதார் உள்ளதை உறுதி செய்ய தனித்துவ அடையாள அமலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் ஆதார் பதிவேற்றம் செய்வது குறித்து இக்குழுவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.அரசு சேவைகள்,வங்கி, மருத்துவ சிகிச்சைகள், மாணவர்கள் பள்ளி,கல்லுாரிகளில் சேர்த்தல் உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், குறிப்பிட்ட அஞ்சலகங்கள், தாலுகா அலுவலகங்களில் செயல்படும் ஆதார் மையம், அரசு அனுமதி பெற்ற இ சேவை மையங்களில் புதியதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் 119 மையங்களில் ஆதார் எடுக்கும், புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.ஒரு முறை ஆதார் எடுத்தால் கடைசி வரை ஒரே ஆதார் எண் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரில் இருமுறை மட்டும் பெயர் மாற்றம் செய்யலாம், ஒரு முறை மட்டும் பிறந்த தேதி, பாலினம் ஆகியவை மாற்ற இயலும். முகவரி, அலைபேசி எண், இமெயில் முகவரி, புகைப்படம் தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் மாற்ற இயலும்.மாவட்டத்தில் அனைவருக்கும் ஆதார் இருப்பதை உறுதி செய்யவும், மலை வாழ்மக்கள் 18 வயதிற்கு மேல் ஆகியும் இதுவரை ஆதார் எடுக்காதவர்களுக்கு ஆதார் எடுப்பதை உறுதி செய்ய தமிழகத்தில் முதல்முறையாக தேனி மாவட்டத்தில் அமலாக்க குழு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில் போலீஸ் எஸ்.பி., சுகாதாரம் துணை இயக்குனர், முன்னோடி வங்கி மேலாளர், சி.இ.ஓ., எல்கார்டு நிர்வாகிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி முதுநிலை மேலாளர், பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளர், மாநில தனித்துவ அடையாள பிரதிநிதிகள் உள்ளனர். இக்குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆதார் சேவை மேம்படுத்துதல், ஆதார் எடுக்கும் பணிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.முதல் ஆலோசனைக்கூட்டத்தில் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் ஆதார் எண் இடம் பெறச் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இதனை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.