| ADDED : ஜூலை 13, 2024 04:19 AM
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், பொதுமக்களுக்கான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், வரி வசூல், பிளான் அப்ரூவல் தொடர்பான பணிகள், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை ஊராட்சி செயலாளர்கள் கவனித்து வருகின்றனர். ஊராட்சி செயலர்கள் 20 ஆண்டுக்கும் மேலாக குறைந்த சம்பளத்தில் நிரந்தரம் இன்றி பணிபுரிந்த ஊராட்சி செயலாளர்களை 2017 நவ. 30ல் அரசு பணி வரைமுறைப்படுத்தியது. தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசின் சலுகைகள் ஏதும் இல்லை. 30 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்த ஊராட்சி செயலாளர்கள் பணி ஓய்வுக்கு பின் எந்த விதமான பண பலன்களும் இன்றி செல்லும் நிலை உள்ளது. ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் கூறியதாவது: ஊராட்சி செயலாளர்கள் பணியின் போது இறந்தால் குழு காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் தொகை மட்டுமே தற்போது பலனாக உள்ளது. பணியில் இருக்கும்போது அரசின் பி.எப், ஜி.பி.எப்., பிடித்தங்கள் ஏதும் இல்லை. 30 முதல் 35 ஆண்டுகள் ஊராட்சி செயலாளர்களாக பணிபுரிந்தாலும் பணி ஓய்வு பெற்று செல்லும்போது பண பலன்கள் ஏதும் கிடைக்காமல் எதிர்கால வாழ்விற்கு திண்டாடும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும், இதுவரை நடவடிக்கை இல்லை. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ஆகஸ்ட் 21ல் மாவட்ட தலைநகரங்களிலும், செப்டம்பர் 27ல் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.