| ADDED : ஆக 15, 2024 04:54 AM
கம்பம் : கம்பம் கிளை நூலகத்தில் வகை வகையாய் வாசிப்போம் திட்டத்தின் கீழ் வாசிப்பு திருவிழா நடைபெற்றது.குழந்தைகளிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க முதன் முறையாக கம்பம், உத்தமபாளையம் ஒன்றியங்களில் 30 நுாலங்களில் வகை வகையாய் வாசிப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம், நூலகத் துறையுடன் தமிழக அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வி மைய குழந்தைகள் 200 முறை நூலகங்களுக்கு சென்றுள்ளனர். குழந்தைகள் இதுவரை வாசித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த வாசிப்பு திருவிழா நடத்தப்படுகிறது.நிகழ்ச்சிக்கு கம்பம் கிளை நூலகர் மணிமுருகன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க செயலாளர் திலீபன் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் வாசிப்பின் முறைகள், உள் வாங்குதல், வாசித்தல், எழுத்து மற்றும் உரையாடல் மூலம் பகிர்தல், மொழித் திறன் வளர்ச்சியில் வாசிப்பின் பங்கு குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளித்தார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆபிதா பர்வின், சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நமது தலைவர்கள் என்ற செந்தில்குமார் நூல் வெளியிடப்பட்டது.