| ADDED : ஆக 01, 2024 10:34 PM
பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசு நில அபகரிப்பு வழக்கில் சஸ்பெண்ட் ஆன மண்டல துணைத் தாசில்தார் மோகன்ராம் வீட்டில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த மதுரையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.பெரியகுளம் தென்கரை பாரதி நகரைச் சேர்ந்தவர் மோகன்ராம் 48. மண்டல துணை தாசில்தாராக இருந்து நில அபகரிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். ஜூன் 16ல் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்னைக்கு சென்றார். இவரது வீட்டு கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரூ.75 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். கேமரா ஹார்ட் டிஸ்க் கையும் எடுத்து சென்றனர். இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த மூர்த்தி 32. அதே ஊர் பசும்பொன் நகரைச் சேர்ந்த அம்சராஜன் 31. ஆகிய இருவரையும் போலீசார் சந்தேகித்தனர். கோவை பீளமேடு பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் மதுரை சிறையில் இருந்த இருவரையும், தென்கரை போலீசார் நீதிமன்ற காவல் எடுத்து விசாரித்தனர். இதில் இருவரும் மோகன்ராம் வீட்டில் கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டனர். இவர்கள் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 48 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இருவரையும் பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறைக்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் மற்றும் போலீசாரை, தேனி எஸ்.பி., சிவபிரசாத் பாராட்டினார்.