| ADDED : ஜூன் 30, 2024 02:23 AM
பெரியகுளம், :தேனிமாவட்டம் பெரியகுளத்தில் போலீஸ் வாகன சோதனையில் காரில் கடத்தப்பட்ட சர்வதேச போதைப் பொருளான ரூ.1.75 லட்சம் மதிப்பு 'மெத்தபெட்டமைன்' மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட்டனர்.பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் எ.புதுப்பட்டி பைபாஸ் ரோட்டில் நேற்று அதிகாலை 2:10 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானலில் இருந்து கம்பம் நோக்கி சென்ற கேரள பதிவு எண் கொண்ட ('கே.எல். 54. ஜி 6124') காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 250 கிராம் கஞ்சா, ஒரு பாக்கெட் கஞ்சா சிகரெட் இருந்தது.அதில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். காரை முழுமையாக சோதனையிட்டதில் அதில் சர்வதேச போதைப்பொருளான 50 கிராம் எடையிலான 30 'மெத்தபெட்டமைன்' பாக்கெட்டுகள் சீட்டுக்கு அடியில் பதுக்கியதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.75 லட்சம். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.இக்கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் விகாஸ் ஷியாம் 22, அதே பகுதி ஆரிப் 22, தேனி மாவட்டம் கம்பம் நாராயணத்தேவன்பட்டி ராம்குமார் 23, ஆகியோரை கைது செய்தனர். இதில் கேரளாவைச் சேர்ந்த சல்மான்கான் 26, என்பவர் தப்பி ஓடினார்.நேற்று காலை தேனி எஸ்.பி., சிவபிரசாத், பெரியகுளம் வடகரை ஸ்டேஷனில் கைதான மூன்று பேரிடம் விசாரணை நடத்தினார். இக்கடத்தலில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூரியரில் வந்தது
கைதானவர்களுக்கு மெத்தபெட்டமைன் கோவை, பெங்களூருவில் இருந்து கூரியர் மூலம் கொடைக்கானலுக்கு வந்துள்ளது. முகம் தெரியாத நபருக்கு இவர்கள் அலைபேசியில் பேசி ஆன்லைன் பணம் பரிவர்த்தனை செய்துள்ளனர். இதனை நான்கு பேரும் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் சில்லறை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.