உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடை வெயிலால் கொதிக்கும் தேனி குளர்ச்சி தரும் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்

கோடை வெயிலால் கொதிக்கும் தேனி குளர்ச்சி தரும் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்

தேனி :மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் தேனி மாவட்டம் அமைந்திருந்தாலும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிக அதிரித்து காணப்படுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சுட்டெரிக்கும் வெயிலால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். மதியம் ஒரு மணி முதல் மாலை வரை பஜார், முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி விடுகிறது. அதிகரித்து வரும் வெயில் கொடுமையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் வெயில் நேரத்தில் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், தேவைப்பட்டால் மட்டும் மதியம் வெளியில் செல்லுங்கள். வெளியில் செல்வோர் குடிநீர் பாட்டிலுடன் செல்ல அறிவுரைகள் வழங்கி உள்ளனர். தேனி மாவட்டத்தில் நேற்று 98.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பகலில் நிலவும் வெயில் தாக்கம் இரவில் துாங்க முடியாத அளவிற்கு வெட்கை நிலவுகிறது. முதியோர், குழந்தைகள் வெயில் தாக்கத்தால் அவதிக்குள்ளாகின்றனர்.கோடையை எப்படி சமாளிக்கிறோம் என்பது குறித்து மக்கள் கூறியதாவது:

முல்லையாற்றில் குளிக்கிறோம்

நர்மதா, போலீஸ் குடியிருப்பு, தேனி: தேனியில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெப்பம் தகிக்கிறது. வீட்டில் இருந்தாலும் வெயில் தாக்கத்திற்கு பயந்து வீரபாண்டி முல்லை ஆற்றில் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கிறோம். காரமான உணவுகளை தவிர்த்து நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் அதிகளவில் எடுத்து வருகிறோம். டாக்டர்கள், டயட்டீசியன் அறிவுறைப்படி தினமும் ஏ.பி.சி., ஜூஸ் குடித்து வருகிறோம். அடுத்த 20 நாட்களுக்கு வெப்ப அலை வீசும், ஏப்ரல், மே கோடை காலம். அப்போது குடை இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது என முடிவு எடுத்துள்ளோம்.', என்றார்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் பால் சர்பத்

முருகன், தேனி: கோடை காலம் துவங்கிவிட்டது. அடுத்த ஜூன் வரை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனால் கற்றாழை ஜூஸ் விற்பனை செய்து வந்தேன். தற்போது காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை பால் சர்பத் தயாரித்து ரூ.30க்கு விற்பனை செய்கிறேன். இதில் பாதாம் பிஷின், துளசி விதைகள் (ஜப்சா விதை) கலந்து, தேவைக்கு ஏற்ப ஐஸ் சேர்த்து, பால் கலந்து விற்பனை செய்கிறேன். உடலுக்கு சத்து மிக்க பால் சர்பத் வழங்குவதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வந்து பருகிச் செல்கின்றனர். ரோஸ், பாதாம், சாக்லேட் மில்க் வகைகளும் ரூ.30க்கு விற்பனை செய்து வருகிறேன். மேலும் அதிகாலை 5:30 மணி முதல் 9:20 மணி வரை கற்றாழை ஜூஸ், கொள்ளு சூப், வகைகளை விற்பனை செய்கிறேன்.

சுவையான கூழ் குடிக்கலாம்

--கலைவாணி, பெரியகுளம் : 5 ஆண்டாக கூழ் கடை வைத்துள்ளேன். கம்பங்கூழ், கேப்பை கூழ், மோர் இவைகளுக்கு 'சைடு டிஸ்ஸாக' மோர் மிளகாய் வத்தல், கத்திரிக்காய் கூட்டு, சீனிஅவரைக்காய் வத்தல், கறிவேப்பிலை சட்னி, மாங்காய் தொக்கு உண்டு. ஆண்டு முழுவதும் கூழ் கடை வைத்துள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கின்றனர். 250கிராம் எடை கொண்ட கூழ் ரூ.20க்கும், மோர் டம்ளர் ரூ.10க்கும் விற்கிறேன். பலரும் வீடுகளுக்கு பார்சல் வாங்கி செல்கின்றனர். இவைகள் குடித்தால் உடம்பில் குளிர்ச்சி ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

தாகம் தணிக்கும் தர்பூசணி

முருகன், தர்பூசணிவியாபாரி, கம்பம் : கோடை காலத்தில் மட்டும் தர்பூசணி பழம் விற்பனை செய்வேன். மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் இது போன்று வெயில் அடித்தது இல்லை. வெயிலை சமாளிக்க தர்பூசணி விரும்பி சாப்பிடுகின்றனர். இது அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.ஒரு பீஸ் ரூ.15க்கு விற்பதால் ஏழைகளின் பழமாகும். பழத்தின் தரத்திற்கு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. விலை குறைவாக இருப்பதாலும், உடல் சூட்டை தணித்து தாகம் தீர்க்கும் பழமாக இருப்பதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தர்பூசணி விரும்பி சாப்பிடுகின்றனர்.

அருமருந்தாகும் இளநீர்

கருப்பையா, ஆண்டிபட்டி : வெயிலில் அதிகம் அலைந்தால் உடல் உஷ்ணமாகி மஞ்சள் காமாலை, நீர் கடுப்பு, கல்லடைப்பு உட்பட பல நோய்கள் ஏற்படுகிறது. கோடை காலத்தில் உடல் பாதிப்பு அதிகமாகும். இயற்கையான இளநீர் இதற்கு அருமருந்தாக உள்ளது. மழைக்காலம் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இளநீர் விற்பனை செய்கிறேன். விலை அதிகமானாலும் கோடையில் ஏற்படும் பாதிப்பை தடுக்க இளநீர் அதிகம் பருகுகின்றனர். பெரிய அளவில் வருமானம் அதிகம் இல்லை என்றாலும் சம்பளம் கிடைத்தால் போதும் என சொந்த தொழில் செய்கிறேன். வெயிலில் அலைந்து களைப்பாக வருபவர்களுக்கு இளநீர் வெட்டி கொடுப்பதால் தொழிலில் சந்தோசம் ஏற்படுகிறது.

உடலில் எதிர்ப்பாற்றலை முறியடிக்கும் பாக்டீரியா

டாக்டர் பாரதி, மாவட்ட மருத்துவமனை, பெரியகுளம்: கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது புதிய புதிய பாக்டீரியாக்கள் உருவாக்கின்றன. இதனால் உணவுப் பொருட்களை மீண்டும், மீண்டும் சுட வைத்து சாப்பிடாமல் தேவையான உணவை உடனடியாக தயார் செய்து சாப்பிடுவது நல்லது. அதிக கார உணவுகளை தவிர்த்து, அதிக நீர் சத்துக்கள் உள்ள வெள்ளரி, கேரட் காய்கனிகளை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும். கையில் குடிநீர் இருக்க வேண்டும். தினமும் இளநீர் சாப்பிடலாம். வெயில் காலத்தில் ஜில்லுன்னு ஜூஸ், ஐஸ் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. அது உடனடியாக சளி உண்டாக்கி தொண்டையில் கிருமி தாக்கும். கோடையில் வீட்டில் மோர் தயாரித்து பருகும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். அதையும் உடனடியாக செய்து பருக வேண்டும். மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது வெப்பநிலை மாற்றத்தால் புதுவிதமாக பாக்டீரியா கிருமிகள் உருவாகின்றன. இது உடலில் எதிர்ப்பாற்றலை தோற்கடித்து நோயை உண்டாக்குகின்றன. இதில் பாதிக்கப்படுவோரை குணமடைய செய்வது சவாலாக இருக்கிறது. அதிக எதிர்ப்பு சக்தி உள்ள மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. உடலில் உள்ள தண்ணீர் சத்து, வெயிலால் அதிகளவில் வெளியேறிவிடும். அதனால் தண்ணீர் அளவு அதிகளவில் குடிக்க வேண்டும். மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். பழைய புத்தகங்களை புரட்டுவது, வீடு சுத்தம் செய்யும் போது வரும் துாசியில் கூட இந்த பாக்டீரியாக்கள் உள்ளன. கவனமாக இருப்பது அவசியம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ