உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆடி கடைசி வெள்ளி கோயில்களில் சிறப்பு வழிபாடு; வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்ற பெண்கள்

ஆடி கடைசி வெள்ளி கோயில்களில் சிறப்பு வழிபாடு; வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்ற பெண்கள்

போடி : ஆடி மாத கடைசி வெள்ளி, வரலட்சுமி விரத பூஜையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று பெண்கள் திரளாக சிறப்புப் பூஜையில் பங்கேற்றனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள் கணவர் தீர்க்க ஆயுளுடன் வாழ சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். பெண்களின் சகோதரர்கள் மஞ்சள் சேலை வழங்கினர். ஆடி வெள்ளியை முன்னிட்டு பாலாபிஷேகம் பூஜைகள் நடந்தன.தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சியம்மன் ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. வரலட்சுமி விரதம் இருந்த பெண் பக்தர்கள் திரளாக பூஜையில் பங்கேற்றனர்.வீரகாளியம்மன் கோயிலில் வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.அரண்மனைப்புதுார் நர்த்தன விநாயகர் கோயிலில் லலிதாம்பிகை அம்மனுக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேனி என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயிலில் உள்ள மகாலட்சுமி தேவிக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் 50,001 வளையல் அலங்காரத்தில் பத்மாவதி தயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரானைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. போடி குலாலர் பாளையம் காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.போடி தாய் ஸ்தலம் சவுடாம்பிகை அம்மன் கோயில், திருமலாபுரம் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மல்லீஸ்வரி அம்மன், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.கூடலுார்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி கடைசி வாரத்தை முன்னிட்டு அம்மன் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக 1500 சங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ், அவல் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.கூடல் சுந்தரவேலவர் கோயில் வளாகத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன், ராஜாத்தி அம்மன் கோயில், வீருகண்ணம்மாள், துர்க்கை அம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை நடந்தது. பெண்களுக்கு வளையல், குங்குமம், தாலி வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பெரியகுளம்: கவுமாரியம்மன், பாலசுப்பிரமணியர் கோயில் அறம் வளர்த்த நாயகி அம்மன், அழகு நாச்சியம்மன், காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன், கம்பம் ரோடு காளியம்மன், உத்தம காளியம்மன், பள்ளத்து காளியம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ