உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செங்குளத்தில் சவலாக மாறிய ஆகாயத்தாமரை அகற்றும் பணி; லட்சுமிபுரம் கிராமத்தினர் புதிய முயற்சி

செங்குளத்தில் சவலாக மாறிய ஆகாயத்தாமரை அகற்றும் பணி; லட்சுமிபுரம் கிராமத்தினர் புதிய முயற்சி

பெரியகுளம் : பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் செங்குளம் கண்மாய் நீரில் படர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணி சவலாக மாறியுள்ளது.செங்குளம் கண்மாய் 50 ஏக்கர் பரப்பிலானது. ஐந்து மாதங்களுக்கு முன் இக்கண்மாயில் சிறிது சிறிதாக பரவிய ஆகாயத்தாமரை கண்மாயில் நீரே தெரியாத அளவிற்கு வளர்ந்தது. லட்சுமிபுரம் ஊராட்சி சாக்கடை கழிவு நீரும் இக்கண்மாயில் கலப்பதால் துர்நாற்றம் வீசி ஆகாய தாமரை வளர வழிவகுத்தது. இதனை அகற்றுவதற்கு பொதுமக்கள் பொதுப்பணித்துறையில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்து மாதவன் முயற்சியால், சமூக நோக்கில் சில தொழிற்சாலை நிர்வாகம் வழங்கிய நிதியால் ஆகாய தாமரை அகற்றும் பணியினை கிராமத்தினர் மேற்கொண்டனர். இதற்காககொச்சியில் இருந்து வந்த மிதவை வாகனம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றி மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அள்ளி டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர். இப் பணி மே 28ல் துவங்கியது. இதற்கு தினமும் ரூ.40 ஆயிரம் செலவாகிறது. 25 நாட்களில் சுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் முளைப்பதால் இப் பணி சவாலாக மாறியது. காற்று வீசும் போது ஒரு பகுதியில் சேரும் ஆகாயத்தாமரை அகற்றப்படுகிறது. காற்று எப்போது வீசும் என காத்திருக்கும் நிலை பணியை சோர்வடைய செய்தது.மதகு சீரமைப்பு: கண்மாயில் 20 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது. நீரினை மதகு வழியாக வாய்க்காலுக்கு செல்ல 10 ஆண்டுகளாக மண் மேவி செயல்படாத மதகு சீரமைத்து தண்ணீர் வெளியேற்றும் பணி நடக்கிறது. 5 அடி வரை தண்ணீர் வெளியேறினால், கண்மாயில் மீதமுள்ள 40 சதவீதம் ஆகாயத்தாமரை அகற்றப்படும். இது சாத்தியப்படாத பட்சத்தில் அருகேயுள்ள கருங்குளத்திற்கு தண்ணீர் கடத்தி ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.கண்மாயில் சாக்கடை கலக்கக்கூடாது என வலியுறுத்தினர்.ஊராட்சி தலைவர் ஜெயமணி கூறுகையில், 'இப்பிரச்னைக்கு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை