வைகை அணையை துார்வார வலியுறுத்தி நீரில் இறங்கி பெண் போராட்டம்
ஆண்டிபட்டி:வைகை அணையை துார்வார வலியுறுத்தி சென்னையை சேர்ந்த நர்மதா 46, அணை நீரில் இறங்கி போராட்டம் நடத்தினார். போலீசார் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் நர்மதா. கணவர் நந்தகுமார், 18 வயதில் மகன் உள்ளனர். ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்டவர். நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இவர் 2017 மார்ச் 23ல் வைகை அணைக்கு வந்து அணையை துார் வார வலியுறுத்தி இதே போல் போராட்டம் நடத்தினார். அவரது கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்த போலீசார், அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் வைகை அணை துார் வாரும் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அணை நீரில் இறங்கினார். பாதுகாப்பு கருதி போலீசார் அவரை ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.நர்மதா கூறியதாவது: தி.மு.க., அ.தி.மு.க., அரசுகள் இரண்டுமே வைகை அணை துார்வாரும் பணிக்கு முக்கியத்துவம் தரவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள் இது குறித்து அழுத்தம் தரவில்லை. அவர்கள் முயற்சி எடுத்திருந்தால் ஐந்து மாவட்ட மக்களுக்கு பலன் கிடைத்திருக்கும். துார்வாரும் பணிக்கு தேவைப்படும் ரூ. 89 லட்சத்தை மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் பங்கீடு செய்து துார்வாரும் பணிகளை துவக்க வேண்டும். இதை வலியுறுத்தவே போராடுகிறேன் என்றார்.