உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெரியகுளம் நகராட்சி முற்றுகை பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெரியகுளம் நகராட்சி முற்றுகை பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி 3 வார்டுகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கவுன்சிலர்கள் வார்டு மக்களுடன் சேர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுவிட்டனர். பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு தினமும் 52 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து சோத்துப்பாறை அணைக்கு வரும் தண்ணீர், சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து தென்கரை, வடகரை மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்க வேண்டும். சில தினங்களாக வடகரையில் உள்ள 2, 8 மற்றும் 20 வது வார்டுகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. இதனை கண்டித்து அ.ம.மு.க., கவுன்சிலர்கள் பால் பாண்டியன், ராஜேஸ்வரி, வெங்கடேஷன் ஆகியோர் தங்கள் பகுதிக்கு அரசியல் காழ்புணர்ச்சியால் குடிநீர் வினியோகம் செய்ய வில்லை என கூறி வார்டு மக்களுடன் நகராட்சி அலுவலகத்தை ஒரு மணி நேரம் முற்றுகையிட்டனர். கமிஷனர் மீனா பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர். கமிஷனர் கூறுகையில்: வடகரையில் சம்பந்தப்பட்ட வார்டுகளில் சில பகுதிகள் மேடாக உள்ளதால் தண்ணீர் செல்வதற்கு சிரமமாக உள்ளது. சீராக குடிநீர் வினியோகம் செய்ய தற்போது பணிகள் நடந்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி நிர்வாகத்திடம் இல்லை. 2 வது வார்டு வைத்தியநாதபுரத்தில் 2014ல் 2.5 லட்சம் கொள்ளளவு உடைய மேல்நிலைப்பொட்டி கட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனை ஆய்வு செய்து கட்டட உறுதித் தன்மை சான்றிதழ் வழங்குமாறு தேனி பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த மேல்நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. கோடை காலத்தை சமாளிப்பதற்கு பேரிஜம் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை