உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் புதிதாக 17 மினி பஸ்கள் இயக்க அனுமதி: வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

மாவட்டத்தில் புதிதாக 17 மினி பஸ்கள் இயக்க அனுமதி: வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

தேனி: மாவட்டத்தில் மினிபஸ்கள் இயக்க 17 விண்ணப்பங்கள் ஏற்று வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடித்து மினி பஸ்களை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.மாவட்டத்தில் 35 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க பிப்.13ல் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. மினி பஸ்கள் 25 கீ.மீட்டர் துார வழித்தடத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். துவங்கும் இடமும், முடியும் இடமும் போக்குவரத்து சேவை இல்லாத கிராமங்களாக இருப்பது அவசியம். சேவை பகுதியில் 1 கி.மீ., தேவையின் பொருட்டு அதிகரிக்க கோரலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. மினி பஸ்களில் 25 இருக்கைகளுக்கு அனுமதி உண்டு. மினி பஸ்கள் இயக்க 35 பேர் விண்ணப்பித்திருந்தனர். புதிய விண்ணப்பங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், அழகேசன் பரிசீலனை செய்து, கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கின் ஒப்புதல் பெற்று, 17 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், ‛புதிய மினி பஸ் வழித்தடங்கள் பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. இதில் நிர்ணயித்த டிக்கெட் கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்க கூடாது. மீறி வசூலித்தால் ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்றனர்.புதர் மண்டிய மினி பஸ்கள்:கடந்த 2000ம் ஆண்டில் மாவட்டத்தில் 64 மினிபஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்களிடம் வரவேற்பு பெற்ற மினி பஸ்கள் காலப்போக்கில் ேஷர் ஆட்டோக்கள், மினிவேன்கள் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றி இறக்கின. இதனால் மினிபஸ்களின் டீசலுக்கு கூட கட்டுபடியாகவில்லை என பலரும் சேவையை நிறுத்திவிட்டனர். அவை பல இடங்களில் புதர்மண்டி நிற்கின்றன. தற்போது 10க்கும் குறைவான மினி பஸ்கள் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி