டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுத 27,158 பேருக்கு அனுமதி; கருவூலத்திற்கு வந்த வினாத்தாள்கள்
தேனி : மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுத 27,158 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு 108 மையங்களில் நடக்கிறது. தேர்விற்கான வினாத்தாள்கள் கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டன.தமிழகத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூலை 12ல் நடக்கிறது. இத்தேர்வு தாலுகா வாரியாக ஆண்டிபட்டி 18, தேனி 29, போடி 14, பெரியகுளம் 17, உத்தமபாளையம் 30 என மொத்தம் 108 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுத 27,158 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்விற்கான வினாத்தாள்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து தாசில்தார்கள் சத்யபாமா, கண்ணன், சதீஷ்குமார், மருதுபாண்டி, சந்திரசேகர் முன்னிலையில் வினாத்தாள்கள் தாலுகா வாரியாக சார்நிலை கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.தேர்வு கண்காணிப்பிற்காக 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவையும் சேர்த்து தேர்வு கண்காணிப்பு பணியில் 1300க்கும் மேற்பட்ட அலுவலர்கள், 150 போலீசார் ஈடுபட உள்ளனர்.