| ADDED : நவ 27, 2025 06:01 AM
மூணாறு: இடுக்கி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் உள்ள 1034 வார்டுகளில் 2,795 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், மூணாறு ஊராட்சி 16ம் வார்டில் பா.ஜ., கூட்டணி சார்பில், சோனியாகாந்தி என்பவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இம்மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக டிச.9ல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நவ.22ல் நிறைவு பெற்றது. மாவட்டத்தில் ஊராட்சிகள் 52ல் 832, எட்டு ஒன்றியங்களில் 112, இரண்டு நகராட்சிகளில் 73, மாவட்ட ஊராட்சியில் 17 வார்டுகள் என 1034 வார்டுகள் உள்ளன. அவற்றில் 2795 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 வார்டுகளிலும் காங்., இடது சாரி, பா.ஜ., ஆகிய கூட்டணிகள் போட்டியிடுகின்றன. அடிமாலி டிவிஷனில் காங்., கூட்டணி' சீட்' வழங்காததால் காங்., மாவட்ட குழு உறுப்பினர் இன்பன்ட்தாமஸ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பா.ஜ., கூட்டணி ஊராட்சிகளை சேர்ந்த 832 வார்டுகளில் 187 வார்டுகளில் போட்டியிடவில்லை. 38 வார்டுகளை கொண்ட தொடுபுழா நகராட்சியில் 4 வார்டுகளில் பா.ஜ., கூட்டணி போட்டியிடவில்லை. இடமலைகுடி ஊராட்சியில் 7ம், வார்டு, மறையூர் ஊராட்சியில் முதலாம் வார்டு ஆகியவற்றில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. உடும்பன்சோலை ஊராட்சியில் உள்ள 14 வார்டுகளில் 2 வார்டுகளில் மட்டும் பா.ஜ.,கூட்டணி போட்டியிடுகிறது. தாமரையில் போட்டியிடும் சோனியாகாந்தி மூணாறு ஊராட்சியில் 16ம் வார்டில் (நல்லதண்ணி) பா.ஜ. கூட்டணி சார்பில் சோனியாகாந்தி என்பவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரே பெயரில் மூன்று வேட்பாளர்கள் மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சியில் 6ம் வார்டில் காங்கிரஸ், இடது சாரி, பா.ஜ., ஆகிய கூட்டணிகள் சார்பில் அழகர்ராஜ் என்ற பெயரில் மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இதே வார்டில் 'சீட்' தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் இடது சாரி கூட்டணி போட்டியிடவில்லை.