நிரம்பி வழியும் 36 கண்மாய்கள்
தேனி: மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மொத்தம் உள்ள 626 கண்மாய், குளங்களில் 36 நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதில் 196 கண்மாயில் 25 சதவீதத்திற்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது.மாவட்டத்தில் மூலவைகை, முல்லை பெரியாறு, வரட்டாறு, வராகநதி, கொட்டக்குடி ஆறு, மஞ்சளாறு உள்ளிட்ட ஆறுகளை தவிர அதிக அளவில் குளங்கள், கண்மாய்கள், ஊருணிகள், குட்டைகள் உள்ளன. இதில் பெரியாறு வைகை நீர் வளக்கோட்ட பராமரிப்பில் 36, மஞ்சளாறு நீர்வளக்கோட்ட பராமரிப்பில் 99, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் ஊருணி, குளங்கள், கண்மாய்கள் 491 என மொத்தம் 626 நிர்நிலைகள் உள்ளன. தொடர் மழையால் 36 கண்மாய், குளங்கள் 100 சதவீதம் நீர் நிரம்பி மறுகால் செல்கின்றன. இதில் 37 கண்மாய்களில் 75 சதவீதம் நீர் நிறைந்து காணப்படுகிறது. 122 கண்மாய்களில் 50 சதவீதத்திற்கும் மேல் நீர் இருப்பு உள்ளது. 235 நீர்நிலைகளில் 25முதல் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மீதமுள்ள 196 கண்மாய்களில் 25 சதவீதத்திற்குள் குறைவாக நீர் உள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் நீர் நிலைகளுக்கு தேவையின்றி செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.