மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 37 குழுக்கள்: 19 ஆயிரம் மீட்பு கருவிகள், 1000 ஊழியர்கள் ரெடி
தேனி: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நகராட்சி, பேரூராட்சிகள், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1000 பேர் கொண்ட 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு பணிக்கு பயன்படுத்த லாரிகள், மரம் அறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் என 19,700 கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்கிறது. மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு ஏற்படும் 43 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தங்க வைக்க 67 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. பல்வேறு அரசு துறைகள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த வாரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லில்லி தலைமையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நகராட்சிகள், பேரூராட்சி நிர்வாகத்துறை, ஊராட்சிகள், மின்வாரியம், பொதுப்பணித்துறை, வேளாண் பொறியியல் துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 37 குழுக்களில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் 992 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே தாலுகா வாரியாக தாசில்தார் தலைமையில் ஒரு குழுவும், மண்டல அளவில் துணை கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தற்போது அமைக்கப்பட்டுள்ள 37 குழுக்கள் இணைந்து செயல்படுவார்கள்.இக் குழுக்களில் மரம் அறுவை இயந்திரம், ஜெனரேட்டர், லாரிகள், டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரம், பொக்லைன், கழிவு நீர் சுத்திகரிப்பு லாரி என 19,700 கருவிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். இது தவிர அனைத்து பகுதிகளிலும் தனியாரிடம் உள்ள லாரிகள், மண் அள்ளும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மரம் அறுவை இயந்திர விபரங்களும் கணக்கெடுத்துள்ளனர்.இந்த குழு மழையினால் சேதம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபடும். கருவிகள், நபர்கள் அதிகம் தேவைபட்டால் மற்ற பகுதிகளில் உள்ள குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழுக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். மழையினால் சேதம் ஏற்பட்டால் 1077 என்ற இலவச தொடர்பு எண், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு 04546- 250 101 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.