| ADDED : நவ 28, 2025 09:01 AM
போடி: தேனி மாவட்டம், போடியை சேர்ந்த சுதா 37, என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கிய பாண்டியராஜ், மனைவி தீபா, உறவினர்கள் தமிழரசி, வேல்முருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். போடி ஜே.கே.பட்டி பாரதி நாராயணன் தெருவில் வசிப்பவர் சுதா. பி.பி.ஏ., படித்துள்ளார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போடி வினோபாஜி காலனியை சேர்ந்த பாண்டியராஜ், மனைவி தீபா, உறவினர்கள் தமிழரசி, வேல்முருகன் ஆகியோர் ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர். சுதாவின் பெற்றோர் பாண்டி, பொட்டியம்மாள் ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளனர். அதன் பின் நான்கு மாதங்கள் கழித்து அரசு பணியில் சேர்ந்து கொள்ளும்படி தமிழக அரசு முத்திரை பதித்த, சென்னை உயர் நீதிமன்ற சீல் வைத்து சுதா பெயருக்கு பணி நியமன ஆணை, சம்பள உத்தரவை வழங்கினர். உத்தரவை பெற்ற சுதா, கணவர் விஜயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்கு பணி நியமன ஆணை போலியானது என தெரிந்தது. வேலைக்காக கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு பாண்டியராஜ், தீபா ஆகியோரிடம் பலமுறை கேட்டும் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் சுதா புகார் செய்தார். பாண்டியராஜ், தீபா உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.