போடியில் கருங்காலி மரம் வெட்டி விற்க முயன்ற 6 பேர் கைது; 300 கிலோ கட்டைகள், ஜீப் பறிமுதல்
போடி : தேனி மாவட்டம் போடி அருகே கொட்டகுடியில் கருங்காலி கட்டைகளை விற்க முயன்ற 6 பேரை தமிழ்நாடு வனப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 கிலோ கருங்காலி கட்டைகள், ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு -- குமுளி பைபாஸ் ரோட்டிலுள்ள சந்திரன் தோட்டத்து வீட்டில் கருங்காலி கட்டைகளை பதுக்கி விற்பனை செய்வதாக வனப்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறை அதிகாரி சுரேஷ், சிறப்பு தனிப்படை வனச்சரகர் ராம்குமார் மற்றும் வனத்துறையினர் வீட்டை சோதனையிட்டனர். அங்கிருந்த குரங்கணியைச் சேர்ந்த சிவராஜ் 30, யோகேஷ்குமார் 36, கருப்பையா 50, வத்தலகுண்டைச் சேர்ந்த கலைச்செல்வன் 32, சங்கிலிமுத்து 55, ஆகியோரை பிடித்தனர்.இவர்களை போடி வனச்சரகர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று உதவி வன பாதுகாப்பு அலுவலர் கில்பர்ட், வனச்சரகர் நாகராஜ் விசாரித்தனர். போடி கொட்டகுடியை சேர்ந்த பால்பாண்டி 52, தேரடி தெரு தெய்வேந்திரன் 38, ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரிந்தது. பால்பாண்டியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். தெய்வேந்திரன் தப்பினார். கடத்தலுக்கு பயன்படுத்திய தெய்வேந்திரனுக்கு சொந்தமான ஜீப்பை பறிமுதல் செய்தனர்.சிவராஜ் சில மாதங்களுக்கு முன் சந்திரனிடம் டிரைவராக சேர்ந்துள்ளார். சந்திரன் ஓட்டலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். ஓட்டலுக்கு வந்த வத்தலகுண்டைச் சேர்ந்த சங்கிலி முத்து, கலைச்செல்வன் உள்ளிட்டோர் சிவராஜிடம் குரங்கணி பகுதியில் கருங்காலி மரங்களை வெட்டி வர கூறினர். ஒரு கட்டைக்கு ரூ.5000 தருவதாக கூறினர்.இதனால் சிவராஜ், நண்பர்கள் யோகேஷ்குமார், கருப்பையா மூலம் கொட்டகுடியில் இருந்த கருங்காலி மரத்தை வெட்டி கட்டைகளாக மாற்றி விற்பனைக்காக வத்தலக்குண்டு கொண்டு வந்தது தெரிந்தது.