அரசு மாதிரிபள்ளி மாணவர்கள் 82 பேர் நீட், ஜே.இ.இ., தேர்வு எழுத ஏற்பாடு கூடுதலாக 3 நுழைவுத்தேர்வுகள் எழுத பயிற்சி
தேனி: தேனி அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 82 பேர் நீட், ஜே.இ.இ., தேர்வுகளுடன், கூடுதலாக மூன்று நுழைவுத்தேர்வுகள் எழுதவும் பயிற்சி அளித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தேக்கம்பட்டியில் அரசு மாதிரிப்பள்ளி கடந்த கல்வி ஆண்டில் துவங்கப்பட்டது. இங்கு தமிழ், ஆங்கில வழியில் உயிரி-கணிதம், கணினி அறிவியல் -கணிதம் என இருபாடப்பிரிவுகள் மட்டும் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வினை 82 மாணவர்களும், பிளஸ் 1 தேர்வினை 83 மாணவர்களும் எழுதுகின்றனர்.இதில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., கியூட், கிளாட் உள்ளிட்ட 18 வகை அரசு நுழைவுத்தேர்விற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 2 படிக்கும் 82 மாணவர்களில் 40பேர் நீட், 42 பேர் ஜே.இ.இ., தேர்வு எழுத உள்ளனர்.இதுபற்றி கல்வித்துறையினர் கூறுகையில், மாணவர்கள் உயர்கல்வி நுழைவுத்தேர்வு எழுத கட்டணத்தை மாநில அரசு செலுத்துகிறது. ஒவ்வொரு மாணவரும் நீட், ஜே.இ.இ., தவிர கூடுதலாக மூன்று நுழைவுத் தேர்வுகள் எழுதலாம்.பிளஸ் 2 படிப்பு, நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சியுடன், சுய தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இரு ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள் இங்கேயே தங்கி படிக்கும் வகையில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனி விடுதி, நுாலக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.