உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது லாரி: ஒருவர் பலி மூவர் படுகாயம் ; கார் நொறுங்கியது

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது லாரி: ஒருவர் பலி மூவர் படுகாயம் ; கார் நொறுங்கியது

உத்தமபாளையம் : தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர இட்லி கடையில் புகுந்தது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த தாமஸ் மாத்யூ 46, மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டி பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடுப்பன்சோலையில் இருந்து சிசு தாமஸ் என்பவருக்கு சொந்தமான லாரி நேற்று காலை மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்றது. லாரியை உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் அக்பர் 27, ஓட்டினார். நேற்று காலை 7:00 மணிக்கு உத்தமபாளையம் பழைய பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வளைவில் லாரியை திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தள்ளுவண்டி இட்லி கடையில் புகுந்தது. கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ள வெள்ளத்தூவல் என்ற ஊரை சேர்ந்த தாமஸ் மேத்யூ மீது வடை சுடுவதற்கான கொதிக்கும் எண்ணெய் கொட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இட்லி கடைக்கு அருகே நின்ற கார் மீது லாரி மோதியதில் முன்புறம் நொறுங்கியது. காருக்குள் இருந்த உத்தமபாளையம் மூத்த வழக்கறிஞர் கனகராஜு 70, தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் கடையில் நின்ற உத்தமபாளையம் ஞானம்மன் கோயிலைச் சேர்ந்த வெள்ளையம்மாள் 52, பவித்ராவும் 14, காயமுற்றனர். டிரைவர் அக்பர் போலீசில் சரணடைத்தார். டி.எஸ்.பி., செங்கோட்டு வேலன் சம்பவயிடத்தை ஆய்வு செய்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை