இரவில் நடந்து சென்ற பயணியிடம் வழிப்பறி
பெரியகுளம்: பெரியகுளத்தில் இரவில் ரோட்டில் நடந்து சென்ற காந்தி 60, என்பவரை போதையில் வந்த மர்மநபர்கள் தாக்கி ரூ.2200, அலைபேசியை பறித்து சென்றனர். பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகனுக்கு திருமணம் அழைப்பிதழை கொடுத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு 10:40 மணிக்கு வத்தலக்குண்டிலிருந்து தேனி செல்லும் அரசு பஸ்சில் வந்தார். பஸ் பெரியகுளத்திற்கு இரவு 11:20 மணிக்கு வந்தது. பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன் இறங்க கூறினர். இரவு நேரம் என்பதால் பஸ் ஸ்டாண்டிற்குள் இறக்கிவிட காந்தி தேவாரம் டிப்போ டிரைவர், கண்டக்டரிடம் வலியுறுத்தியும் நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றனர். அங்கிருந்து அரண்மனை தெருவிற்கு வி.ஆர்.பி., நாயுடு தெரு வழியாக நடந்து சென்றார். அப்பகுதி மது பாரில் குடித்து விட்டு வந்து 5 பேர் காந்தியை வழிமறித்து தாக்கினர். அவரிடமிருந்து ரூ.2,200 மற்றும் அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பினர். தாக்குதலில் காயமடைந்த காந்தி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் விசாரிக் கின்றனர்.