உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை கீழ் மதகுகளின் ஷட்டர் பராமரிப்பிற்கு நடவடிக்கை

வைகை அணை கீழ் மதகுகளின் ஷட்டர் பராமரிப்பிற்கு நடவடிக்கை

ஆண்டிபட்டி,:வைகை அணையின் கீழ் மதகுகளில் ஷட்டர்கள் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் கிடைக்கும் நீர் வைகை அணையில் தேக்கப்பட்டு தேவைக்கேற்ப தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 65 அடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே மேல் பகுதியில் உள்ள 7 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் தேவைக்கு ஏற்ப திறக்கப்படும். கீழ் பகுதியில் உள்ள 7 ஷட்டர்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையம் வழியாக தேவையான நேரங்களில் தண்ணீர் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் முழு அளவான 71 அடியை எட்டும் போது உபரியாக வரும் நீர், பெரிய, சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். அணையின் கீழ் பகுதியில் உள்ள 7 மதகுகளின் ஷட்டர்கள் எந்நேரமும் செயல்படுவதற்கு தயார் நிலையில் இருக்கும் வகையில் நீர் வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர். தற்போது பருவ மழைக்காலம் துவங்க உள்ளதால் ஷட்டர் பராமரிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அணை கீழ் பகுதியில் உள்ள 7 மதகுகளின் ஷட்டர்கள் பெரும்பாலும் நீரில் மூழ்கி இருப்பதால் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஷட்டரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள ரப்பர் சீல்டு மதகுகளில் நீர் கசிவை தடுக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் தற்போது ஷட்டர்களில் சீல்டு மாற்றி அமைக்கவும், பெயின்டிங் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஷட்டர்கள் பராமரிப்பு பணியால் அணையில் நீர் திறப்பதிலும், வெளியேறும் நீரை நிறுத்துவதிலும் சிக்கல் ஏற்படாது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ